அதிகாரிகள் முறையாக வேலை செய்யாததால் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுகிறது-தி.மு.க.கவுன்சிலர் வேதனை

குடிநீர் பிரச்சினையை தீர்க்க அதிகாரிகள் முறையாக வேலை செய்யாததால் மக்களிடம் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுகிறது என அரக்கோணம் நகரமன்ற கூட்டத்தில் தி.மு.க.கவுன்சிலர் வேதனை தெரிவித்தார்.

Update: 2023-04-29 17:01 GMT

அரக்கோணம்

குடிநீர் பிரச்சினையை தீர்க்க அதிகாரிகள் முறையாக வேலை செய்யாததால் மக்களிடம் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுகிறது என அரக்கோணம் நகரமன்ற கூட்டத்தில் தி.மு.க.கவுன்சிலர் வேதனை தெரிவித்தார்.

நகரமன்ற கூட்டம் முறை

அரக்கோணம் நகரமன்ற கூட்டம் நகரமன்ற தலைவர் லட்சுமி பாரி தலைமையில் நடைபெற்றது. துணை தலைவர் கலாவதி அன்பு லாரன்ஸ் முன்னிலை வகித்தார். நகராட்சி பொறியாளர் ஆசிர்வாதம் வரவேற்றார்.

கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது:-

துரைசீனிவாசன் (தி.மு.க. குழு தலைவர்):- எனது வார்டில் 2 குடிநீர் தொட்டிகள் பழுதடைந்துள்ளது. பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் ரூ.11 லட்சத்துக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. ஆனால் வேலை ஏதும் இதுவரை நடைபெறவில்லை. நகரில் வேலைகள் நடைபெறுகிறதா என்று யாரும் வந்து கூட பார்ப்பது இல்லை.

கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் நகரில் குடிநீர் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் முறையாக வேலை செய்யாததால் மக்களிடையே இந்த அரசுக்கு அவப்பெயர் ஏற்படுகிறது.

நந்தாதேவி (தி.மு.க.):- நான் கவுன்சிலராக வந்து ஒரு வருடம் இரண்டு மாதம் ஆகிறது. எனது வார்டுக்கு இதுவரை ஒதுக்கப்பட்ட திட்டங்கள், நடைபெற்ற பணிகள் விவரத்தை தெரிவிக்க வேண்டும்.

அலட்சியம்

வார்டில் குடிநீர் பிரச்சினை குறித்து பலமுறை புகார் தெரிவித்தும் ஆனால் அதிகாரிகள் அதை கேட்டு சரி செய்யாமல் அலட்சியமாகவே இருக்கின்றனர்.

ஜெர்ரி (அ.தி.மு.க. குழு தலைவர்): எங்கள் வார்டில் ஒரு வருடமாக பொதுமக்கள் பயன்படுத்தும் கழிவறைகள் பழுதடைந்துள்ளது என புகார் தெரிவித்தும் அதிகாரிகள் சரி செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை.

ஏற்கனவே ரூ.5 லட்சத்திற்கு டெண்டர் விடப்பட்டது அதை எடுத்தவர் இறந்து விட்டார். வேறு ஒரு ஒப்பந்ததாரர் வந்தார். அவரும் வேலை செய்யவில்லை. இப்போது மற்றொரு ஒப்பந்தததாரர் எடுத்திருக்கிறார். இனிமேலாவது பணிகள் முடிக்கப்படுமா என்று தெரியவில்லை.

லெட்டர்பேடு

நரசிம்மன் (அ.தி.மு.க.):- எனது வார்டில் 10 அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் வருகிறது. குடிநீர் பிரச்சினையை தீர்க்க பல முறை மனு கொடுத்து எனது லெட்டர் பேடு கூட தீர்ந்து விட்டது. ஆனால் குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படவில்லை.

நகர மன்ற தலைவர் லட்சுமி பாரி:- உறுப்பினர்கள் சுட்டிக்காட்டிய பிரச்சினைகளுக்கு அதிகாரிகளுடன் கலந்து பேசி உடனடி தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படும். முன்னதாக கூட்டத்தில் 24 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Tags:    

மேலும் செய்திகள்