கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் ஊர்வலம்
கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் ஊர்வலமாக சென்றனர்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அகவிலைப்படி, சரண்டர் உள்ளிட்டவற்றை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டையில் அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. புதுக்கோட்டை பழைய பஸ் நிலையத்தில் இருந்து தொடங்கிய இந்த ஊர்வலம் சின்னப்பா பூங்கா அருகே நிறைவடைந்தது. முன்னதாக பழைய பஸ் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜபரூல்லா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ரெங்கசாமி கோரிக்கைகள் குறித்து பேசினார். தமிழ்நாடு அரசு மருத்துவ ஆய்வக நுட்புனர் சங்கத்தின் மாநில தலைவர் செல்வகுமார் தொடங்கி வைத்து பேசினார். இதில் அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.