அரசு டாக்டர்கள் உள்ளிருப்பு போராட்டம்
ஊக்கத்தொகையை உயர்த்தி வழங்க கோரி ஊட்டியில் அரசு டாக்டர்கள் கருப்பு பட்டை அணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊட்டி
ஊக்கத்தொகையை உயர்த்தி வழங்க கோரி ஊட்டியில் அரசு டாக்டர்கள் கருப்பு பட்டை அணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊக்கத்தொகை உயர்வு
ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு ஆஸ்பத்திரிகள், மருத்துவக் கல்லூரிகள் என தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மருத்துவ நிலையங்களில் பணியாற்றும் பொதுப்பிரிவு டாக்டர்களை விட, சிறப்பு பிரிவு டாக்டர்களுக்கு ஊக்கத்தொகையை உயர்த்தி வழங்க கோரி 4 ஆண்டுகளாக போராட்டம் நடத்தினர். இதைத்தொடர்ந்து கடந்த 2021-ம் ஆண்டு ஊக்கத்தொகையை உயர்த்தி வழங்க அரசாணை வெளியிடப்பட்டது.
ஆனால், அந்த அரசாணை தமிழக அரசால் வெளியிடப்பட்டு 2 ஆண்டுகள் ஆகியும் இதுவரை அமல்படுத்தப்பட வில்லை. இந்தநிலையில் அரசு டாக்டர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் நேற்று டாக்டர்கள் கருப்பு பட்டை அணிந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊட்டி அரசு மகப்பேறு மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்ட டாக்டர்கள் இதுதொடர்பான கோரிக்கை மனுவை டீன் பத்மினியிடம் வழங்கினர்.
உள்ளிருப்பு போராட்டம்
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட டாக்டர்கள் கூறியதாவது:-
கொரோனா தொற்று உள்பட பல்வேறு சவாலான காலகட்டங்களில் நாங்கள் பணிபுரிந்து வருகிறோம். சுகாதாரத் துறையில் முன்னிலையில் உள்ள தமிழகத்தில் மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் டாக்டர்களுக்கான சம்பளம் குறைவாக உள்ளது. இந்த பிரச்சினைகளை சரி செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, ஒரு துறையில் ஒருவர் மட்டும் கலந்துகொள்ளும் வகையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டோம்.
அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் அவசர சிகிச்சை பிரிவு உள்பட மற்ற துறைகளில் போதுமான டாக்டர்கள் பணியில் இருந்ததால் சிகிச்சையில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.