பஸ் இயக்க கோரிஅரசு கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்திண்டிவனத்தில் பரபரப்பு

பஸ் இயக்க கோரி அரசு கல்லூரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் திண்டிவனத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-03-14 18:45 GMT

திண்டிவனம், 

திண்டிவனத்தில் அரசு கலைக்கல்லூரி உள்ளது. இங்கு படிக்கும் கூட்டேரிப்பட்டு, விக்கிரவாண்டி பகுதி கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் நேற்று கல்லூரி முடிந்ததும் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக திண்டிவனம் ரெயில்வே மேம்பாலம் கீழ் பகுதி பஸ் நிறுத்தத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் இலவச பஸ் பாஸ் மூலம் சென்னையில் இருந்து விழுப்புரம் செல்லும் அரசு பஸ்சில் ஏறினர். உடனே பஸ் கண்டக்டர் மாணவர்களை டவுன் பஸ்சில் ஏறி செல்லுமாறு கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் டவுன் பஸ் இயக்க கோரி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் திண்டிவனம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாணவர்கள் கூறுகையில், விழுப்புரம் மார்க்கமாக செல்லும் பஸ்களில் பயணம் செய்ய கண்டக்டர்கள் அனுமதிப்பதில்லை. அரசு டவுன் பஸ்சில் மட்டும் தான் பயணம் செய்ய வேண்டும் என கூறுகிறார்கள். தற்போது தேர்வு சமயம் என்பதால் சரியான நேரத்துக்கு டவுன் பஸ் கிடைப்பதில்லை. ஆகவே கல்லூரி நேரத்துக்கு டவுன் பஸ் இயக்கவேண்டும் என்றனர். அதற்கு போலீசார், இதுபற்றி போக்குவரத்து கழக அதிகாரியிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதுடன், மாணவர்களை விழுப்புரம் செல்லும் பஸ்சில் ஏற்றி சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்