அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் 2-வது நாளாக போராட்டம்
அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குரும்பலூரில் உள்ள பெரம்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்கள், அதன் கூட்டமைப்பு சார்பில் 2-வது நாளாக நேற்று மதியம் வாயிற் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரி நுழைவு வாயில் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கவுரவ விரிவுரையாளர்களை தமிழக அரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டும். குறிப்பாக தமிழக அரசு அரசாணை 56-ஐ உடனடியாக அமல்படுத்த வேண்டும். வெயிட்டேஜ் மதிப்பெண் முறையில் உதவி பேராசிரியர்களை நியமிக்க வேண்டும். பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரையின்படி நிர்ணயித்த ஊதியத்தினை உடனடியாக வழங்க வேண்டும். உதவிப் பேராசிரியருக்கான மாநில தகுதித்தேர்வை தொடர்ந்து நடத்த வேண்டும். கவுரவ விரிவுரையாளர்களின் பணி பாதுகாப்பினை உறுதி செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.