அரசு பஸ் சிறைபிடிப்பு
பசுமாத்தூர் கிராமத்தில் அரசு பஸ் சிறைபிடிக்கப்பட்டது.
கே.வி.குப்பம்
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே பசுமாத்தூர் கிராமத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் பள்ளிகொண்டாவில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் படித்து வருகின்றனர்.
இந்த கிராமத்திற்கு தினமும் 2 பஸ்கள் வந்து செல்கின்றன. கடந்த சில நாட்களாக அரசு பஸ் சரியான நேரத்திற்கு வருவதில்லை என கூறப்படுகிறது.
சரியாக வராத குடியாத்தம் பணிமனையில் இருந்து வரும் பஸ்களை நிறுத்திவிட்டு, வேலூர் பணிமனையில் உள்ள பஸ்களை பசுமாத்தூர் பகுதிக்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அப்பகுதி கிராம மக்கள் பசுமாத்தூர்- வேலூர் இடையே சென்று வரும் அரசு பஸ்சை சிறை பிடித்தனர்.
தகவல் அறிந்ததும் பணிமனை அதிகாரிகள் விரைந்து வந்து பயணிகளிடமும், பொதுமக்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தி குறைகளைக் கேட்டு அறிந்தனர். இதைத் தொடர்ந்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
இதன்பிறகு பஸ்சை பொதுமக்கள் அனுப்பி வைத்தனர்.
இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.