அரசு பஸ்களை பராமரிப்பதில் அதிகாரிகளின் அலட்சியத்தால் பொதுமக்கள் அவதி
அரசு பஸ்களை பராமரிப்பதில் அதிகாரிகளின் அலட்சியத்தால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
பழுதாகும் அரசு பஸ்கள்
அன்றாட அத்தியாவசிய தேவைகளை நிறைவு செய்துகொள்வதற்கு வசதியாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் உடுமலை கிளை சார்பில் மத்திய பஸ் நிலையத்தில் இருந்து சுற்றுப்புற கிராமங்களுக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதன் மூலமாக பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்லும் கூலித்தொழிலாளர்கள் பயனடைந்து வருகின்றனர்.
இந்த சூழலில் அரசு பஸ்கள் பராமரிப்பில் நிர்வாகம் அலட்சியம் காட்டி வருவதாக தெரிகிறது. இதன் காரணமாக அவை பழுதாகி ஆங்காங்கே திடீரென நின்று விடுகிறது. இதனால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
நடுவழியில் நின்ற பஸ்
பல்வேறு தரப்பட்ட பொதுமக்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக அரசு பஸ்கள் பெரிதும் உதவியாக உள்ளது. இதனால் நாள்தோறும் பயனடைந்து வருகின்றோம். ஆனால் உடுமலை கிளையில் அரசு பஸ்கள் பராமரிப்பில் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர். இதன் காரணமாக அவை ஓடிக்கொண்டிருக்கும் போதே திடீரென ஆங்காங்கே நின்று விடுகிறது. இதனால் பொதுமக்கள் தக்க தருணத்தில் தேவை மற்றும் சேவையை நிறைவேற்றிக்கொள்ள முடியாமல் பின்னடைவை சந்தித்து வருகின்றனர்.
அந்த வகையில் நேற்று முன்தினம் இரவு அமராவதியை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ் கொங்கலக்குறிச்சிக்கு அருகே திடீரென பழுதாகி நடுவழியில் நின்று விட்டது. நள்ளிரவு நேரம் என்பதால் பொதுமக்கள் பரிதவித்து போனார்கள். பின்னர் ஒரு வழியாக நீண்ட நேரத்துக்கு பிறகு மாற்று பஸ் பிடித்து வீடுகளுக்கு சென்றனர். நிர்வாகத்தின் அலட்சியத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படுவது வேதனை அளிக்கிறது.
முறையாக பராமரிக்க வேண்டும்
அதே போன்று கடந்த சில மாதங்களாக அரசு பஸ்களை கிராமங்களுக்கு முறையாக இயக்காமல் திடீரென நிறுத்தி விடுகிறார்கள்.
குறிப்பாக பெண்களுக்கு இலவச பயணம் அறிவித்த பின்பு தான் பஸ்கள் கிராமங்களுக்கு இயக்கப்படாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறித்து பொதுமக்கள் தரப்பில் கேட்டபோது பல்வேறு காரணங்களை கூறி வேண்டு மென்றே அதிகாரிகள் தட்டிக்கழித்து வருகின்றனர்.
இதனால் அரசு மீது பெண்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவி வருகிறது. எனவே பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு பஸ்களை உரிய முறையில் பராமரிப்பு செய்து சீரான முறையில் பராமரித்து கிராமங்கள் தோறும் இயக்குவதற்கு முன் வர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.