வகுப்புகளை புறக்கணித்து அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டம்
மதிப்பெண் பட்டியலில் உள்ள குளறுபடியை நிவர்த்தி செய்யக்கோரி உடுமலை அரசு கலைக்கல்லூரி மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தளி
மதிப்பெண் பட்டியலில் உள்ள குளறுபடியை நிவர்த்தி செய்யக்கோரி உடுமலை அரசு கலைக்கல்லூரி மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு கலைக்கல்லூரி
உடுமலை அரசு கலைக் கல்லூரியில் சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இதில் அரசியல் அறிவியல் பிரிவில் படித்து வருகின்ற மாணவர்களுக்கு அகமதிப்பெண் பட்டியலில் ஏற்பட்டுள்ள குறைபாட்டை திருத்தி வழங்குவதில் பல்கலைக்கழகம் தாமதப்படுத்தி வருவதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து இறுதி ஆண்டு படித்து வருகின்ற மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து மாணவர்கள் கூறியதாவது:-
இரண்டாம் பருவத் தேர்வில் இன்டர்னல் செக்யூரிட்டி என்ற பாடத்தில் அகமதிப்பெண்கள் குறைவாகவும், ஒரு சில மாணவர்களுக்கு பூஜ்ஜியம் என்று மதிப்பெண் பட்டியலில் இருந்தது. அதை திருத்தி வழங்க கோரி பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் எங்களது எதிர்காலம் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. எனவே வேறு வழியின்றி போராட்டத்தில் ஈடுபடும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்று தெரிவித்தனர்.
ஆர்.டி.ஓ.விடம் மனு
இதற்கிடையில் நேற்று பாதிக்கப்பட்ட மாணவர்கள் உடுமலை ஆர்.டி.ஓ ஜஸ்வந்த் கண்ணனிடம் முறையிட்டனர். அதன் பேரில் அவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டார்.அப்போது மதிப்பெண் குளறுபடியில் ஏற்பட்டுள்ள குறைபாட்டை சீரமைத்து தரப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவித்து உள்ளனர்.இதைத் தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு வகுப்பிற்கு சென்றனர்.மாணவர்களின் போராட்டத்தால் அரசு கலைக் கல்லூரி பகுதியில் பரபரப்பு நிலவியது.