கோவில்பட்டி அரசு, தனியார் மருத்துவமனைகளில்டாக்டர்கள், மருத்துவ ஊழியர்களுக்குஉரிய பாதுகாப்பு வழங்க கோரிக்கை
கோவில்பட்டி அரசு, தனியார் மருத்துவமனைகளில் டாக்டர்கள், மருத்துவ ஊழியர்களுக்குஉரிய பாதுகாப்பு வழங்க போலீஸ் துணை சூப்பிரண்டிடம் சங்கத்தினர் கோரிக்கை மனுகொடுத்தனர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி பகுதியில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் டாக்டர்கள், மருத்துவ ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று டாக்டர்கள் சங்கத்தினர் போலீஸ் துணை சூப்பிரண்டிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து இந்திய டாக்டர் சங்கத்தின் கோவில்பட்டி கிளை செயலாளர் எஸ்.சிவநாராயணன் தலைமையில் இணைச் செயலாளர்கள் ஜி.சுஜாதா, எஸ்.தாமோதரன், டாக்டர்கள் என்.டி.சீனிவாசன், டி.பத்மாவதி, கோமதி, பூவேஸ்வரி மற்றும் டாக்டர்கள் துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேஷிடம் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
டாக்டர் மீது தாக்குதல்
கோவில்பட்டி அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் சமீப காலமாக நோயாளிகளை பார்க்க வருபவர்கள் என்ற பெயரில் சில சமூக விரோதிகள் மருத்துவமனை பணிகளுக்கு இடையூறு அளித்தும், டாக்டர் மற்றும் மருத்துவ பணியாளர்களை மிரட்டியும் வருகின்றனர். கடந்த 17-ந்தேதி கோவில்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பார்வையாளர் நேரம் அல்லாத நேரத்தில் இரவு பணியில் இருந்த மருத்துவ பணியாளர்களிடம் தகராறு செய்து, பெண் டாக்டரை சிலர் தாக்கியுள்ளனர்.
பாதுகாப்பு வேண்டும்
இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கோவில்பட்டி கிழக்கு போலீஸ் நிலையத்தில் டாக்டர் புகார் செய்துள்ளார். இந்த புகாரின் மீது மருத்துவமனை பாதுகாப்பு சட்டத்தின் படியும், அரசு அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து டாக்டர் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கு பணியில் இடையூறு செய்ததற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுபோன்ற சம்பவங்களால் டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் ஒருவித அச்சத்துடன் பணிபுரியும் சூழல் உள்ளது. எனவே, உரிய நடவடிக்கையின் மூலம் எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் ஏற்படுவதை தவிர்த்து டாக்டர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், என தெரிவித்திருந்தனர்.