கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் மகளிர் சுயஉதவிக்குழு பொருட்கள் சந்தை
திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் மகளிர் சுயஉதவிக்குழு பொருட்கள் சந்தை நடந்தது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் வணிக நிர்வாகவியல் துறையும், தூத்துக்குடி மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கம், மகளிர் திட்டமும் இணைந்து மகளிர் சுய உதவிக் குழுக்களின் பொருட்களை சந்தைப்படுத்தும் விதமாக கல்லூரி சந்தையை, கல்லூரி வளாகத்தில் நடத்தின. கல்லூரி முதல்வர் பொ.ஜெயந்தி குத்து விளக்கேற்றி விற்பனையை தொடங்கி வைத்தார்.
மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த சந்தையில் ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி, மதுரை, சேலம், மயிலாடுதுறை, ஓட்டப்பிடாரம், திருச்செந்தூர் ஆகிய பகுதிகளில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புகளான சணல் பை பொருட்கள், துணி வகைகள், பர்ஸ் வகைகள், வாழை நார் பொருட்கள் மூலம் தயாரிக்கும் கைவினைப் பொருட்கள், செயற்கை நகைகள், அழகு பொம்மைகள், தென்னம் பூ, ஊறுகாய் வகைகள், பனை ஓலை பொருட்கள், கீ செயின் பெயர் எழுதுதல், மூலிகை பொருட்கள், ஊதுபத்தி, சாம்பிராணி. ஆகியவை விற்பனை செய்யப்பட்டன.
இதில் மகளிர் சுய உதவி குழு பெண்களுடன் இணைந்து கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி வணிக நிர்வாகவியல் துறை மாணவிகளும் பொருட்களை சந்தைப்படுத்தினர். இதில் பேராசிரியர்களும், மாணவிகளும் திரளாக கலந்து கொண்டு பொருட்களை வாங்கி சென்றனர். இந்நிகழ்ச்சி மாணவிகளை தொழில் முனைவோர்களாக தூண்டும் விதத்திலும், சுய உதவிக்குழு பெண்களை ஊக்கப்படுத்தும் நோக்கத்திலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஏற்பாடுகளை வணிக நிர்வாகவியல் துறைத்தலைவர் ரேணுகா, மேலாண்மை மன்ற செயலர் பேராசிரியர் தெய்வ லட்சுமி, பேராசிரியர்கள் விஜயலட்சுமி, செல்லபிரியா ஆகியோர் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் மகளிர் திட்ட மேலாளர் ரூபன் ஆஸ்டின், உதவியாளர் மாரி செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.