கவர்னர்கள் அதிகாரம் செய்ய வந்ததாக கருதக்கூடாது

கவர்னர்கள் அதிகாரம் செய்ய வந்ததாக கருதக்கூடாது

Update: 2023-07-05 19:15 GMT

கோவை

கவர்னர் என்பவர் அதிகாரம் செய்ய வந்ததாக கருதக்கூடாது என்று கோவையில் ஜார்கண்ட் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

உற்சாக வரவேற்பு

ஜார்க்கண்ட் மாநில கவர்னராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று விமானம் மூலம் கோவை வந்தார். அவருக்கு பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா உள்பட கட்சியினர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். பின்னர் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பிரதமர் மோடி தமிழர்கள் மீதும், தமிழகம் மீதும் மகத்தான நம்பிக்கை வைத்திருக்கிறார். இதனால் தான் 3 தமிழர்கள் 4 மாநிலங்களில் கவர்னர்களாக இருக்கின்றனர். இது தனிப்பட்ட கட்சிக்கு கிடைத்த பெருமையாக கருதவில்லை. இது தமிழ் இனத்துக்கு கிடைத்த பெருமையாக கருதுகிறேன். கவர்னராக பொறுப்பேற்ற பிறகு ஜார்கண்ட் மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அந்த மாநில மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு முதல் முறையாக தமிழகத்திற்கு வந்து இருக்கிறேன்.

அதிகாரம் செய்ய வந்ததாக கருதக்கூடாது

மணிப்பூர் கலவரம் தற்போது படிப்படியாக கட்டுப்படுத்தபட்டு வருகிறது. இதை அரசியலாக்காமல் அமைதியை ஏற்படுத்த வேண்டும். அதேபோல் தமிழகத்தில் குறிப்பிட்ட கிராமத்தில் குடிக்கும் தண்ணீரில் அசுத்தம் கலக்கப்பட்டு உள்ளது. இதை அரசியல் ஆக்காமல் இதில் ஈடுபட்டவர்களை பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக முதல்-அமைச்சர் ஸ்தானத்தில் நான் இருந்து இருந்தால் அமைச்சர் செந்தில்பாலாஜியை சிறிது காலம் பதவியில் இருந்து விலகி இருங்கள், உங்கள் மீது உள்ள குற்றம் நிரூபிக்கப்படவில்லை எனில் மீண்டும் இணைத்து கொள்கிறேன் என்று சொல்லி இருப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடைேய தமிழகத்தில் கவர்னருக்கும், அரசுக்கும் உள்ள முரண்பாடுகள் குறித்த நிருபா்களின் கேள்விக்கு கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் அளித்த பதில், கவர்னர்களின் செயல்பாடு மாநில அரசாங்கங்களின் செயல்பாடுகளை பொறுத்து அமைந்துள்ளது. கவர்னர் என்பவர் ஏதோ அதிகாரம் செய்ய வந்ததாக கருதக்கூடாது. கவர்னர் அரசியல் சட்டத்தின் படி மாநில அரசு செயல்படுவதை உறுதிபடுத்துகிறார் என்று தெரிவித்தார்.


Tags:    

மேலும் செய்திகள்