கவர்னரின் நடவடிக்கை ஜனநாயக நடைமுறைகளுக்கு பேராபத்து ஏற்பட்டிருப்பதை வெளிப்படுத்தியுள்ளது - முத்தரசன்

சட்டப்பேரவை மாண்பை களங்கப்படுத்திய கவர்னர் நடவடிக்கைக்கு கண்டனம் என்று முத்தரசன் கூறியுள்ளார்.

Update: 2023-01-09 20:41 GMT

சென்னை,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நடப்பு ஆண்டின் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக் கூட்டத் தொடரை தொடங்கி வைத்து தமிழ்நாடு கவர்னர் உரையாற்றியுள்ளார்.

அரசியலமைப்பு அதிகாரம் பெற்ற மாநில அரசின் தலைவர் கவர்னர். இவர் அமைச்சரவையின் ஆலோசனைப்படி தான் செயல்பட முடியும். இந்த வகையில் தமிழ்நாடு அரசு தயாரித்து வழங்கும் உரையை கவர்னர் சட்டமன்றப் பேரவையில் வாசிக்க கடமைப்பட்டவர். இந்த முறையை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை அமைந்த காலம் தொட்டு பின்பற்றி வருவது மரபாக அமைந்துள்ளது. இந்த முறையில்தான் இன்று (09.01.2023) கவர்னர் உரையாற்றும் நிகழ்வு நடந்திருக்க வேண்டும். ஆனால், கவர்னர் ஆர்.என்.ரவி, சட்ட மன்றப் பேரவையின் மாண்புக்கு நீங்கா களங்கம் ஏற்படுத்தும் முறையில் மிகவும் தரம் தாழ்ந்து நடந்து கொண்டிருப்பது உச்சமட்ட அத்துமீறலாகும்.

அவையின் மரபுகளை உடைத்தும், தமிழ்நாட்டின் நன்மதிப்பு பெற்ற தலைவர்கள் பெயர்களையும், ஆளும் அரசு "திராவிட மாடல் ஆட்சி" என்று உரிமை கொண்டாடுவதை நிராகரித்தும் அவமதித்துள்ளார். தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்வதை ஏற்க மறுத்துள்ள ஆர்.என்.ரவியின் அநாகரிகச் செயலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

அண்மைக் காலமாக கவர்னரும், பாஜக மற்றும் சங் பரிவார் கும்பலும் தமிழ்நாட்டின் அமைதி நிலையை சீர்குலைத்து, கலகத்தை ஏற்படுத்தும் நோக்கத்தோடு செயல்பட்டு வருவதன் தொடர்ச்சியாகவே கவர்னர் நடவடிக்கை அமைத்திருக்கிறது. இது ஜனநாயக நடைமுறைகளுக்கும், அமைதி வாழ்வுக்கும் பேராபத்து ஏற்பட்டிருப்பதை வெளிப்படுத்தியுள்ளது. இந்தப் பேராபத்தை எதிர் கொண்டு முறியடிக்க, தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு போராட முன்வர வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்