விபத்தில் காயமடைந்த வாலிபருக்கு கவர்னர் தமிழிசை முதலுதவி சிகிச்சை

விபத்தில் காயமடைந்த வாலிபருக்கு கவர்னர் தமிழிசை முதலுதவி சிகிச்சை ஆம்புலன்சில் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

Update: 2022-11-05 00:01 GMT

சென்னை,

தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் இருந்து நேற்று சாலை மார்க்கமாக புதுச்சேரி நோக்கி காரில் பயணித்து கொண்டிருந்தார். காட்டாங்கொளத்தூர் பகுதியில் சென்றபோது வாலிபர் ஒருவர் விபத்தில் சிக்கி சாலையில் கிடந்தார்.

இதனை கவனித்த கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் உடனடியாக காரை நிறுத்த சொன்னார். தமிழிசை சவுந்தரராஜன் டாக்டர் என்பதால் அந்த வாலிபரின் நாடி துடிப்பை முதலில் பரிசோதித்தார்.

பின்னர் தனது காரில் இருந்த முதலுதவி சிகிச்சை பெட்டகத்தை எடுத்து வர சொன்னார். அதன் மூலம் காயமடைந்த வாலிபருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தார். இதையடுத்து அந்த வாலிபர் சகஜ நிலைக்கு திரும்பினார். அப்போது அவரிடம், உங்களுக்கு வேறு எங்கேனும் வழி இருக்கிறதா? என்று அக்கறையுடன் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கேட்டறிந்தார்.

பின்னர் ஆம்புலன்சு வாகனத்தை வரவழைத்து அந்த வாலிபரை மேல் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். அப்போது தைரியமாக இருங்கள் என்று சொல்லி அந்த நபருக்கு நம்பிக்கை ஊட்டினார். அந்த வாலிபர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட ஆஸ்பத்திரி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனின் இந்த மனிதநேய பணிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்