கவர்னரும், முதல்-அமைச்சரும் இணைந்து செயல்படவேண்டும்

தமிழகத்தில் மக்களுக்கு நல்லது நடக்க கவர்னரும், முதல்- அமைச்சரும் இணைந்து செயல்படவேண்டும் என்று கோவையில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.

Update: 2023-07-09 19:30 GMT
தமிழகத்தில் மக்களுக்கு நல்லது நடக்க கவர்னரும், முதல்- அமைச்சரும் இணைந்து செயல்படவேண்டும் என்று கோவையில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.


நீர் மேலாண்மை


திருப்பூர் செல்வதற்காக பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். அங்கு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-


தமிழ்நாட்டில் நீர் மேலாண்மைக்கு அரசு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இதற்காக அதிக அளவில் நிதி ஒதுக்க வேண் டும். தமிழகத்தில் 60 ஆண்டு கால திராவிட கட்சிகள் ஆட்சியில் நீர் மேலாண்மைக்கு எதுவும் செய்யவில்லை. அனைத்து ஆறுக ளிலும் தடுப்பணை கட்ட வேண்டும்.


விலைவாசி உயர்வு


கொள்ளிடம் ஆற்றில் 10 தடுப்பணை கட்ட வேண்டும் என்று பா.ம.க. வலியுறுத்தினால் அரசு 10 குவாரிகள் திறக்க அனுமதி கொடுத்துள்ளது. விலைவாசி உயர்வால் மக்கள் பாதிக்கப்பட வில்லை என அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறியது ஏற்புடையது அல்ல.


தக்காளி விலை கடந்த மாதம் மிகக் குறைவாக இருந்த நேரத்தில் அரசு குளிர் பதன கிடங்குகள் அமைத்து பாதுகாத்து இருந்தால் தற்போது குறைந்த விலைக்கு தக்காளியை விற்பனை செய்து இருக்கலாம்.சிறைச்சாலை உள்பட அனைத்து இடங்களிலும் தங்கு தடை இன்றி கஞ்சா புழக்கத்தில் இருக்கிறது. இதுகுறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நேரடியாக பலமுறை சொல்லியும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.


கூட்டணி அறிவிப்பு


கோவை சரக டி.ஐ.ஜி. தற்கொலைக்கான காரணத்தை தெளிவுபடுத்த வேண்டும். கர்நாடகாவில் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மேகதாது அணை பிரச்சினை குறித்து பேசவேண்டும். அனைத்து மகளிருக்கும் உரிமை தொகை என்று தேர்தல் அறிக்கையில் கூறிவிட்டு தற்போது தகுதியானவர்களுக்கு மட்டுமே கொடுப்போம் என சொல்வதை ஏற்க முடியாது.


தமிழகத்தில் கவர்னரும், முதல்-அமைச்சரும் இணைந்து செயல்படவேண்டும். இவர்கள் ஒன்றாக செயல்பட்டால் மட்டுமே மக்களுக்கு நல்லது நடக்கும். நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக கூட்டணி குறித்து அறிவிப்போம்.


இவ்வாறு அவர் கூறினார்.


சாதிய கட்சி அல்ல


அதைத்தொடர்ந்து மாமன்னன் திரைப்படத்தை பார்த்தீர்களா? என நிருபர்கள் கேட்ட போது, இதுவரை பார்க்கவில்லை. அதற்கான நேரம் இல்லை என்று கூறினார். உடனே அந்த படத்தில் சாதிய கருத்துகள் இருப்பதால் பார்க்க வில்லையா? என நிருபர்கள் மீண்டும் கேள்வி எழுப்பினர். உடனே அவர், பா.ம.க. சாதிய கட்சி இல்லை. தாழ்த்தப்பட்ட ஒருவருக்கு பொதுசெயலாளர் பதவி கொடுத்து அழகு பார்த்தது பா.ம.க. மட்டுமே, தி.மு.க. வழங்கியதா? என்று கேள்வி எழுப்பினார்.


மேலும் செய்திகள்