தமிழ்நாடு சட்டமன்றத்தில் கவர்னர் நடந்து கொண்ட விதம் ஜனநாயகத்தை கொச்சைப்படுத்தும் செயல்-பாப்பிரெட்டிபட்டியில் கி.வீரமணி பேட்டி

Update: 2023-01-09 18:45 GMT

பாப்பிரெட்டிப்பட்டி:

தமிழ்நாடு சட்டமன்றத்தில் கவர்னர் நடந்து கொண்ட விதம் ஜனநாயகத்தை கொச்சைப்படுத்தும் செயல் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பாப்பிரெட்டிப்பட்டியில் கூறினார்.

கொச்சைப்படுத்தும் செயல்

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாடு சட்டமன்றத்தில் கவர்னர் நடந்து கொண்ட விதம் ஜனநாயகத்தை கொச்சைப்படுத்தக்கூடிய செயல். கவர்னர் அரசு ஊழியர். அவருக்கு தனி அதிகாரம் கிடையாது. அரசின் கொள்கை முடிவை சொல்வதற்காக கவர்னர் உரையாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. தமிழ்நாடு சட்டமன்றத்தின் வரலாற்றில் இப்படி ஒரு கவர்னர் நடந்து கொள்வது என்பது ஜனநாயகத்தையும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியையும் கொச்சைப்படுத்துகின்ற செயல் ஆகும்.

ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்குகின்ற அரசியல் சட்டவிரோத நடவடிக்கையாகும். கவர்னருக்கு என்று ஒரு தனி அதிகாரம் கிடையாது. முழுக்க, முழுக்க இப்போது நடைபெறுவது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி. கவர்னர் ஆட்சி அல்ல. எனவே அமைச்சரவையில் கொள்கை முடிவுகளை எடுத்து அந்த கொள்கை முடிவுகளை விளக்கமாக சொல்வதற்கு தான் கவர்னர் உரை. தனியாக கருத்துகளை சொல்வதற்கு வாய்ப்புகள்கிடையாது.

கருப்பு நாள்

கவர்னரின் நடவடிக்கை நாகரிகமானதல்ல. அரசியலை கொச்சைப்படுத்துவது அவர் பிரமாணம் எடுத்து கொண்ட அரசியல் சட்ட கடமைக்கு விரோதமானது. கவர்னருக்கு என்ன அதிகாரம் என்பதை பேரறிவாளன் வழக்கிலேயே சுப்ரீம் கோர்ட்டு தெளிவாக சுட்டிக்காட்டி உள்ளது. அதற்கு பிறகு கூட கவர்னர் திட்டமிட்டு இதுபோன்று நடந்து கொள்கிறார். பொதுக் கூட்டங்களில் பேசுவது கூட மன்னிக்கக் கூடியது. மறக்க கூடியதாக இருக்கலாம். ஆனால் இது மன்னிக்க முடியாத தவறான நிலை. குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்கலாம் என நினைத்தால் ஒரு போதும் தமிழக மக்கள் அதற்கு இடம் தர மாட்டார்கள்.

சட்டமன்றத்தில் முதல்முறையாக இதுபோல் நடந்திருப்பது கண்டிக்கத்தக்கது. வருந்தத்தக்கது. நாடு முழுவதும் அனைத்து கட்சிகளும் ஜனநாயக பாதுகாப்பு தேவை என்று கூறி, இதை கருப்பு நாள் என அறிவிக்க வேண்டும் என்ற பிரசாரத்தை திராவிட கழகம் முன் நின்று நடத்தும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் பி.பழனியப்பன், தடங்கம் சுப்பிரமணி மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்