அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில்பெண் பயிற்சியாளர் சேர்க்கையை அதிகரிக்க சிறப்பு நிகழ்ச்சி
அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் பெண் பயிற்சியாளர் சேர்க்கையை அதிகரிக்க சிறப்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடக்கிறது.
தூத்துக்குடி மாவட்ட அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் பெண் பயிற்சியாளர்களின் சேர்க்கையை அதிகரிக்க "நமது தொழிற்பயிற்சி நிலையத்தில் நமது சகோதரிகள்" என்ற சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிநாளை (வியாழக்கிழமை) நடக்கிறது.
இது குறித்து தூத்துக்குடி அரசு தொழிற்பயிற்சி நிலைய துணை இயக்குரும், முதல்வருமான வா.வேல்முருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
விழிப்புணர்வு நிகழ்ச்சி
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தூத்துக்குடி, திருச்செந்தூர், வேப்பலோடை ஆகிய அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் 2023-ம் ஆண்டுக்கான நேரடி மாணவர்கள் சேர்க்கை நடந்து வருகிறது. இதில் பெண் பயிற்சியாளர்களின் சேர்க்கையை அதிகரிக்க நாளை (வியாழக்கிழமை) "நமது தொழிற்பயிற்சி நிலையத்தில் நமது சகோதரிகள்" என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில் நவீன தொழிற்பிரிவுகளில் சேர்க்கையை ஊக்குவிக்கும் வகையில் தொழில் 4.0 தர தொழில் நுட்பமையங்களின் ஆய்வகங்கள், பணிமனைகள் மற்றும் இதர நவீன வசதிகளை மாணவிகள், பெற்றோர்கள் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தொழில் 4.0 தர தொழில் நுட்பமையங்களில் உள்ள ரோபோ உடன் பெற்றோர் மற்றும் உறவினர், பெண்கள் செல்பி எடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
பேச்சு போட்டி
தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு வருகை புரிபவர்களைக் கொண்டு கையெழுத்து இயக்கமும் நடைபெற உள்ளது. தொழிற்பயிற்சி நிலைய பயிற்சியாளர்களால் செய்யப்பட்ட அனைத்து திட்டங்களும் கண்காட்சியாக வைக்கப்பட உள்ளது. மேலும் தொழிற்கல்வி குறித்த பேச்சுப்போட்டி, ஓவியப் போட்டி, கவிதைப்போட்டி நடைபெற உள்ளது. முந்தைய ஆண்டுகளில் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்ந்து பயிற்சி நிறைவு செய்து முன்னனி நிறுவனங்களில் பணிபுரியும் பயிற்சியாளர்களைக் கொண்டு தொழிற்பயிற்சி நன்மைகள் குறித்து எடுத்துரைக்கப்பட உள்ளது.
எனவே இந்த நிகழ்ச்சியில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் தற்போது இரண்டாம் ஆண்டு பயிற்சி பெற்று வரும் பயிற்சியாளர்கள் மற்றும் புதிதாக சேர்க்கை செய்யப்பட்ட பயிற்சியாளர்களின் சகோதரிகள் பயிற்சி பெறும் நிலையில் உள்ள உறவினர் பெண்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.