அரசு போக்குவரத்து ஊழியர் வீட்டில் 30 பவுன் நகை, 2 கிலோ வெள்ளி கொள்ளை

அரியலூரில் போக்குவரத்து ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகைகள் மற்றும் 2 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்த மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2022-06-02 18:15 GMT

அரசு போக்குவரத்து ஊழியர்

அரியலூர் மின் நகர் 9-வது குறுக்கு தெருவில் வசிப்பவர் ராமச்சந்திரன் (வயது 48). இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அரியலூர் கிளையில் ஸ்டோர் கீப்பராக பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில் தனது சொந்த ஊரான கீழநத்தம் கிராமத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக கடந்த 29-ந் தேதி குடும்பத்துடன் சென்றார்.

நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டில் வைத்திருந்த பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன.

30 பவுன் நகைகள் கொள்ளை

மேலும், தனது மகளின் திருமணத்திற்காக பீரோவில் வைத்திருந்த செயின், பிரேஸ்லெட், தோடு, மோதிரம் உள்ளிட்ட 30 பவுன் நகைகள் மற்றும் காமாட்சி விளக்கு, குங்கும சிமில், டபரா செட், சந்தனக்கிண்ணம் உள்ளிட்ட 2 கிலோ வெள்ளி பொருட்களை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த அரியலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அந்த நாய் புறவழிச் சாலையில் சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு

இதையடுத்து, கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். இந்த சம்பவம் குறித்து அரியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.கொள்ளை சம்பவம் நடைபெற்ற வீட்டின் அருகே தான் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா வீடு அமைந்து உள்ளது. இந்தநிலையில் மர்ம ஆசாமிகள் துணிகரமாக கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்