அரசு ஊழியர்கள் தர்ணா
தஞ்சையில் அரசு ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை சங்கங்களின் கூட்டு போராட்டக்குழு சார்பில் நேற்று மண்டல அளவிலான தர்ணா போராட்டம் நடந்தது. இதற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க தஞ்சை மாவட்ட தலைவர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். திருவாரூர் மாவட்ட தலைவர் பாண்டியன் வரவேற்றார். செயலாளர் முருகேசன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். தர்ணா போராட்டத்தை தமிழ்நாடு வருவாய் கிராம உதவியாளர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் தமிழ்ச்செல்வன் தொடங்கி வைத்து பேசினார்.போராட்டத்தில், தமிழகஅரசு ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய 3 சதவீத அகவிலைப்படி உயர்வை ரொக்கமாக வழங்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மத்தியஅரசு மற்றும் தமிழக பொதுத்துறை ஊழியர்களுக்கு வழங்குவதுபோல் தமிழகஅரசு ஊழியர்களுக்கும் ரூ.7 ஆயிரம் போனஸ் வழங்க வேண்டும்.வருவாய் கிராம உதவியாளர்களுக்கு அலுவலக உதவியாளர்களுக்கு இணையாக ரூ.15,700 ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 22 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.