வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு முழு நிவாரணம் வழங்க வேண்டும்-தர்மர் எம்.பி. வலியுறுத்தல்

ராமநாதபுரம் மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு முழு நிவாரணம் வழங்க வேண்டும் என தர்மர் எம்.பி. வலியுறுத்தி உள்ளார்.

Update: 2023-01-13 18:45 GMT

பரமக்குடி, 

ராமநாதபுரம் மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு முழு நிவாரணம் வழங்க வேண்டும் என தர்மர் எம்.பி. வலியுறுத்தி உள்ளார்.

2 லட்சம் நெற்பயிர்கள் கருகின

இது குறித்து பரமக்குடியில் அ.தி.மு.க. எம்.பி. தர்மர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ராமநாதபுரம் மாவட்டத்தில் பருவமழை சரியாக பெய்யாததால் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நெற்பயிர்கள் கருகிவிட்டன. கால்நடைகளை வயலுக்குள் மேயவிட்டு கண்ணீர் சிந்துகின்றனர் பாதிக்கப்பட்ட விவசாயிகள். இதனால் விவசாயிகள் மீளாத்துயரத்தில் உள்ளனர்.

மழையை எதிர்பார்த்து விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ஏமாற்றம் தான் மிஞ்சுகிறது. தற்போது பாதிக்கப்பட்ட பகுதிகளில் அதிகாரிகள் கணக்கெடுக்கும் பணியை தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. அவ்வாறு கணக்கெடுக்கும் அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாக சென்று பார்வையிட்டு கணக்கெடுக்க வேண்டும். காரணம் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முழு நிவாரணம் கிடைக்க வேண்டும். பல ஆயிரம் ரூபாய்களை செலவு செய்து நெற்பயிர்களை காப்பாற்ற முடியாமல் போன விவசாயிகளுக்கு தங்களது உயிரையாவது காப்பாற்ற தமிழக அரசு முழு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

முழு நிவாரணம்

கடந்த அ.தி.மு.க.ஆட்சி காலங்களில் மழை வெள்ளங்களில் நெற்பயிர்கள் சேதமடைந்தாலோ மழை பெய்யாமல் பயிர் கருகினாலோ முழு இன்சூரன்ஸ் தொகையும், நிவாரணத்தொகையும் வழங்கப்பட்டது. விவசாயிகளின் பாதுகாப்பு அரணாக அ.தி.மு.க. அரசு இருந்து வந்துள்ளது. அது விவசாயிகளுக்கும் தெரியும்.

விவசாயம் பாதித்தால் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். அதேபோல் தற்போது உள்ள தி.மு.க. அரசு விவசாயிகளுக்கு பாதுகாப்பு அரணாக விளங்க வேண்டும். ஆனால் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு குறைந்த அளவு நிதி ஒதுக்கீடு செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இது விவசாயிகளை ஏமாற்றும் செயலாகும். அவ்வாறு செய்தால் அது விவசாயிகளுக்கு செய்யும் பெரும் துரோகச் செயலாகும். நாட்டின் முதுகெலும்பாக திகழும் விவசாயிகளை பாதுகாப்பது அரசின் கடமையாகும். ஆகவே விவசாயிகளுக்கு முழுமையான பயிர் இன்சூரன்ஸ் தொகையும், முழு நிவாரணத் தொகையும் தமிழக அரசு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்