அரசின் சேவைகள் விரைந்து மக்களை சென்றடைய வேண்டும் - அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

அரசின் சேவைகள் விரைந்து மக்களை சென்றடைய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.

Update: 2023-07-13 08:25 GMT

சென்னை,

உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டம் தொடர்பாக அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார். இதில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம் குறித்தும், திட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீதான தீர்வு குறித்தும் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா, தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

ஆலோசனை கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

மக்களின் அன்றாட தேவைகள், திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். அரசின் திட்டங்களை அனைத்து மக்களுக்கும் கொண்டு செல்ல வேண்டியது அவசியம். அரசின் சேவைகள் குறிப்பிட்ட காலத்திற்குள் விரைந்து மக்களை சென்றடைய வேண்டும். முதல்-அமைச்சரின் முகவரி திட்டத்தில் இதுவரை 86% மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன. பட்டா மேல்முறையீடுகள் மீது அதிகாரிகள் விரைந்து தீர்வுகாண வேண்டும்.

வாரந்தோறும் கட்டாயம் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மனுதாரர்களிடம் தொடர்பு கொண்டு மனுக்களுக்கு தீர்வு காண வேண்டும். விரைவான தீர்வு மட்டும் அல்லாமல் சரியான தீர்வு காண்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும். மக்களின் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டால் தான் அரசு முறையாக பணியாற்றியதாக கருதப்படும்.

மக்களுக்கு வீண் அலைக்கழிப்புகளை ஏற்படுத்தக்கூடாது. பணமோசடி, நிலமோசடி, என காவல்துறைக்கு அதிகளவில் புகார்கள் வருகின்றன. காவல்துறையில் பெறப்படும் மனுக்கள் மீது ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பொருளாதார குற்றங்களால் மக்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். பொருளாதார குற்றங்களை தடுக்க மக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்