கவிதை போட்டியில் அரசு பள்ளி மாணவர்கள் முதலிடம்

கவிதை போட்டியில் அரசு பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்தனர்.

Update: 2023-06-30 19:37 GMT

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் 11, 12-ம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவிகள் இடையே பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும், சமூக சிந்தனைகளையும் வளர்க்கும் நோக்கில் தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகள் பெரம்பலூர் அரசு மேல்நிலை பள்ளியில் நேற்று நடந்தது. போட்டிக்கு மாவட்ட தமிழ் வளர்ச்சி துறையின் உதவி இயக்குனர் சித்ரா தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி அலுவலர் கலைச்செல்வி (இடைநிலை) முன்னிலை வகித்தார். போட்டிகளை பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன் தொடங்கி வைத்தார். போட்டிகளில் மாணவ-மாணவிகள் மொத்தம் 97 பேர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

இதில், கவிதை போட்டியில் முதல் இடத்தை கொளக்காநத்தம் அரசு பள்ளியை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவர் சரவணனும், 2-ம் இடத்தை அரும்பாவூர் அரசு பள்ளியை சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவர் ஆதிசும், 3-ம் இடத்தை வாலிகண்டபுரம் அரசு பள்ளி 12-ம் வகுப்பு மாணவி சோனியா காந்தியும் பிடித்தனர். கட்டுரை போட்டியில் முதல் இடத்தை ஒகளூர் அரசு பள்ளி 11-ம் வகுப்பு மாணவி சுகஷ்யாவும், 2-ம் இடத்தை பெரம்பலூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளியின் 12-ம் வகுப்பு மாணவி கீர்த்தனா ஸ்ரீயும், 3-ம் இடத்தை பெரம்பலூர் ஆருத்ரா வித்யாலயா மெட்ரிக் பள்ளி 12-ம் வகுப்பு மாணவி சுஹாசினியும் பிடித்தனர்.

பேச்சு போட்டியில் முதல் இடத்தை லெப்பைக்குடிகாடு விஸ்டம் மெட்ரிக் பள்ளி 11-ம் வகுப்பு மாணவி ரிபானா பர்வீனும், 2-ம் இடத்தை வேப்பந்தட்டை அரசு பள்ளி 11-ம் வகுப்பு மாணவி கிருபாவும், 3-ம் இடத்தை லெப்பைக்குடிகாடு அரசு மாதிரி பள்ளி 11-ம் வகுப்பு மாணவி தஸ்னீமும் பிடித்தனர். போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடித்த கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூ.10 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.7 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ.5 ஆயிரமும், பாராட்டு சான்றிதழும் கலெக்டர் மூலம் விரைவில் வழங்கப்படவுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்