அரசு பள்ளி மாணவர்கள் படிப்பில் தனி கவனம் செலுத்த வேண்டும்

அரசு பல்வேறு சலுகைகளை வழங்குவதால், அரசு பள்ளி மாணவர்கள் படிப்பில் தனி கவனம் செலுத்த வேண்டும் என்று அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

Update: 2022-07-11 11:01 GMT

ஓட்டப்பிடாரம்:

அரசு பல்வேறு சலுகைகளை வழங்குவதால், அரசு பள்ளி மாணவர்கள் படிப்பில் தனி கவனம் செலுத்த வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவுரை வழங்கினார்.

பள்ளிக்கூடத்தில் அமைச்சர் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள பசுவந்தனை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு நேற்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி வந்தார். பின்னர் வகுப்பறைகளுக்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுடன் அவர் கலந்துரையாடினார்.

அப்போது அமைச்சர் பேசியதாவது:-

பள்ளிக்கூடத்தில் மாணவர்கள் படிப்புடன் விளையாட்டிலும் ஆர்வம் காட்ட வேண்டும். படிக்கிற காலத்தில் செல்போன்களை உபயோகப்படுத்த கூடாது.

பல்வேறு சலுகைகள்

மாணவர்கள் படிப்பில் தனி கவனம் செலுத்தி சாதிக்க வேண்டும். நீட் தேர்வில் வெற்றி பெறும் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு கொடுத்து உயர்கல்வி படிக்க அரசு ஊக்குவித்து வருகிறது. மேலும், 6-ம் வகுப்பு முதல் அரசு பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு உயர்கல்வி படிப்பதற்கு மாதம் ரூ.1000-ம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. அரசுத்துறையில் தமிழ் வழி கல்வியில் பயிலும் மாணவர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது. இதனால் அரசு பள்ளி மாணவ-மாணவிகள் படிப்பில் தனி கவனம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கட்டபொம்மன் கோட்டை

இதனைத் தொடர்ந்து ஓட்டப்பிடாரம் வ.உ.சிதம்பரனார் இல்லத்துக்கு சென்ற அமைச்சர், வ.உ.சிதம்பரனாரின் புகைப்படங்களை பார்வையிட்டார்.

தொடர்ந்து பாஞ்சாலங்குறிச்சியில் வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டையில் உள்ள அவரது சுதந்திரப் போராட்டத்தை சித்தரிக்கும் புகைப்படங்களை பார்வையிட்டு, ஆங்கிலேயர்கள் பயன்படுத்திய பிரங்கி குண்டு மற்றும் அவர் பயன்படுத்திய வாள் ஆகியவற்றை அமைச்சர் பார்வையிட்டார். பின்னர் வீரசக்கதேவி ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்தார். முன்னதாக அமைச்சரை வீரபாண்டி கட்டபொம்மன் நேரடி வாரிசு வீமராஜா என்ற ஜெகவீர பாண்டிய சுப்பிரமணிய கட்டபொம்மு துரை சால்வை அணிவித்து வரவேற்றார்.

Tags:    

மேலும் செய்திகள்