தரையில் அமர்ந்து கல்வி கற்கும் அரசு பள்ளி மாணவர்கள்

வத்திராயிருப்பு அருகே போதிய கட்டிட வசதி இல்லாததால் மண் தரையில் அமர்ந்து அரசு பள்ளி மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

Update: 2022-07-07 20:46 GMT

வத்திராயிருப்பு, 

வத்திராயிருப்பு அருகே போதிய கட்டிட வசதி இல்லாததால் மண் தரையில் அமர்ந்து அரசு பள்ளி மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

அரசு பள்ளி

வத்திராயிருப்பு தாலுகாவிற்கு உட்பட்ட கீழக்கோட்டையூர் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இங்கு அரசு நடுநிலைப்பள்ளி கடந்த 2018-ம் ஆண்டு உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். அதிலும் குறிப்பாக மேல கோட்டையூர், அக்கனாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களில் இருந்து எண்ணற்ற மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

கூடுதல் கட்டிடம்

நடுநிலைப்பள்ளியில் இருந்து உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு 4 ஆண்டுகள் ஆகியும் கூடுதல் பள்ளிக்கட்டிடம் இல்லை. இருந்த ஒரு கட்டிடமும் சேதமடைந்து காணப்படுகிறது. அந்த கட்டிடமும் மூடப்பட்டு விட்டதாலும் மாணவர்கள் தரையில் அமர்ந்து கல்வி கற்க வேண்டிய நிலை உள்ளது.

மழை, வெயில் என்று பாராமல் தரையில் அமர்ந்து மாணவர்கள் கல்வி கற்கவேண்டிய சூழ்நிலை நிலவி வருகிறது. ஆதலால் தரம் உயர்த்தப்பட்ட இந்த பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் அமைத்து மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும், மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டு்ம் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்