ரூ.9½ லட்சத்தில் அரசு பள்ளி பராமரிப்பு
கோத்தகிரி அருகே ரூ.9½ லட்சத்தில் அரசு பள்ளி பராமரிப்பு செய்யப்பட்டது.
கோத்தகிரி,
கோத்தகிரி அருகே சோலூர்மட்டம் கிராமத்தில் அரசு உண்டு உறைவிட ஆரம்பப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் பழங்குடியின மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரசு பள்ளி உரிய பராமரிப்பின்றி இருந்தது. இதையடுத்து ஒருங்கிணைந்த நீலகிரி பாதுகாப்பு சங்கம் மூலம் ரூ.9½லட்சம் செலவில் பள்ளியில் பராமரிப்பு பணிகள் நடந்ததுடன், மறுசீரமைப்பு செய்யப்பட்டது. பராமரிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில், பள்ளியை ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட பழங்குடியினர் நலத்துறை துணை அலுவலர் சுகந்தி பரிமளா, பழங்குடியினர் வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஸ்வரி, தேனாடு ஊராட்சி தலைவர் ஆல்வின், கள இயக்குனர் சிங்கராஜ் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டு பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர்.