மாணவர்கள் வராததால் மூடப்பட்ட அரசு பள்ளி

சுருளியாறு மின்நிலையத்தில் மாணவர்கள் வராததால் அரசு பள்ளி மூடப்பட்டது.

Update: 2023-06-19 19:15 GMT

கூடலூர் அருகே சுருளியாறு மின்நிலையம் அமைந்து உள்ளது. இங்கு மின்வாரிய ஊழியர்களின் குழந்தைகளுக்காக அரசு தொடக்கப் பள்ளி ஒன்று தொடங்கப்பட்டது. இதில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வந்தனர். இங்கு ஒரு தலைமை ஆசிரியர், 2 ஆசிரியர்கள், ஒரு அங்கன்வாடி பணியாளர் என 4 பேர் பணியில் இருந்தனர். இந்நிலையில் கடந்த 2019-20-ம் ஆண்டில் கொரோனா காலக்கட்டத்தில் மாணவர்கள் வருகை 15 ஆக குறைந்தது. இதன் காரணமாக ஒரு தலைமை ஆசிரியர், ஒரு ஆசிரியர், அங்கன்வாடி பணியாளர் என 3 பேர் மட்டும் பணிபுரிந்தனர்.

இந்நிலையில் கடந்த ஆண்டு மேலும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து ஒரு மாணவர் மட்டுமே பள்ளிக்கு வந்தார். இந்நிலையில் இந்த ஆண்டு பள்ளி விடுமுறைகள் முடிவடைந்து கடந்த 14-ந்தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது. இங்கு பணிபுரிந்த தலைமை ஆசிரியர் க.புதுப்பட்டி பள்ளிக்கு மாறுதலாகி சென்று விட்டார். ஒரு ஆசிரியர், அங்கன்வாடி பணியாளர் மட்டும் பள்ளிக்கு வந்தனர். ஆனால் மாணவர்கள் யாரும் பள்ளிக்கு வரவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து கம்பம் தொடக்ககல்வி அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து பள்ளிக்கு மாணவர்கள் யாரும் வராததால், நேற்று அந்த தொடக்கப் பள்ளி மூடப்பட்டது. அங்கு உள்ள ஆசிரியர் லோயர்கேம்பில் உள்ள தொடக்கப் பள்ளிக்கும், அங்கன்வாடி பணியாளர் குள்ளப்பகவுண்டன்பட்டியில் உள்ள பள்ளிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். மாணவர்கள் சேர்க்கை மேற்கொண்டு, மீண்டும் பள்ளியை திறக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்