அரசு ரப்பர் கழக தொழிலாளர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தம்

குமரி மாவட்டத்தில் அரசு ரப்பர் கழக தொழிலாளர்கள் நேற்று 2-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கோட்ட மேலாளர் அலுவலகங்கள் முன் இன்று முதல் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-11-08 20:33 GMT

குலசேகரம், 

குமரி மாவட்டத்தில் அரசு ரப்பர் கழக தொழிலாளர்கள் நேற்று 2-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கோட்ட மேலாளர் அலுவலகங்கள் முன் இன்று முதல் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

காலவரையற்ற வேலை நிறுத்தம்

குமரி மாவட்டத்தில் அரசு ரப்பர் கழக தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி நேற்று முன்தினம் முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தொடங்கினர். இந்த போராட்டம் நேற்று 2-வது நாளாக நடந்தது. இதனால் அரசு ரப்பர் தோட்டங்களில் மரங்களில் பால் வடிப்பு, பால் சேகரிப்பு, மரங்களை பராமரித்தல் போன்ற பணிகள் முடங்கின.

இந்தநிலையில் ரப்பர் கழக தொழிற்சங்க நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் குலசேகரம் சி.ஐ.டி.யு. தோட்டம் தொழிலாளர் சங்க அலுவலகத்தில் நடந்தது. சங்க பொதுச் செயலாளர் எம். வல்சகுமார் தலைமை தாங்கினார். எல்.பி.எப். சங்க செயலாளர் டி.நடராஜன், தொ.மு.ச. கூட்டமைப்பு செயலாளர் விஜயன், அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த சந்திரசேகர், பி.எம்.எம். செயலாளர் ராஜேந்திரன், அன்னை சோனியா-ராகுல் சங்க செயலாளர் குமரன், ஐ.என்.டி.யூ.சி. சங்க நிர்வாகிகள் வேலப்பன், ஜோசப் ஜெரால்டு, ம.தி.மு.க. சங்க செயலாளர் பால்ராஜ் மற்றும் திரளான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

இன்று முதல் ஆர்ப்பாட்டம்

கூட்டத்தில், கோரிக்கையை நிறைவேற்றும் வரை கீரிப்பாறை தொழிற்கூடம் முன்பு தினமும் காத்திருப்பு போராட்டம் நடத்த வேண்டும். அனைத்து கோட்ட மேலாளர் அலுவலகங்கள் முன்பு இன்று (புதன்கிழமை) முதல் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும். வருகிற 14-ந் தேதி நாகர்கோவிலில் உள்ள நிர்வாக இயக்குனர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடத்துவது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்