புறவழிச்சாலை பணிகளை அரசு முதன்மை செயலாளர் ஆய்வு
திருவண்ணாமலையில் புறவழிச்சாலை பணிகளை அரசு முதன்மை செயலாளர் ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலையில் நடைபெற உள்ள கார்த்திகை தீபத்திருவிழாவினை முன்னிட்டு திருவண்ணாமலை வழியாக திண்டிவனம் முதல் கிருஷ்ணகிரி வரை இந்திய தேசியநெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் ரூ.434 கோடி மதிப்பில் 182 கிலோ மீட்டர் தூரம் சாலை அமைக்கப்படுகிறது.
இதில் தேசிய நெடுஞ்சாலையில் திருவண்ணாமலை புறவழிச்சாலை பணிகளை நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அரசு முதன்மைச் செயலாளர் பிரதீப்யாதவ் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் திருவண்ணாமலை எடப்பாளையம் சந்திப்பு மற்றும் செங்கம் சாலையில் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்கவும், தீபத்திருவிழாவிற்கு வரும் வாகனங்கள் நெரிசலின்றி செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
முன்னதாக திருவண்ணாமலையில் மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் கடலூர் - சித்தூர் சாலையில் சாலையோரங்களில் மரக்கன்றுகளை நட்டார்.
ஆய்வின் போது கலெக்டர் முருகேஷ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், சென்னை நெடுஞ்சாலைத்துறை தலைமைப்பொறியாளர் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) சந்திரசேகர், கண்காணிப்புபொறியாளர் பழனிவேல், திருவண்ணாமலை கோட்டப் பொறியாளர் முரளி, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் விழுப்புரம் திட்ட இயக்குனர் வரதராஐன் மற்றும் உயர் அலுவலர்கள், ஒப்பந்ததாரர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.