அரசு நெல் கொள்முதல் நிலைய சுவர் இடிந்து விழுந்தது

திருச்சிற்றம்பலத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு நெல் கொள்முதல் நிலைய சுவர் இடிந்து விழுந்தது. இந்த கட்டுமான பணி தரமற்ற நிலையில் உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்

Update: 2023-09-24 20:23 GMT

திருச்சிற்றம்பலம்:

திருச்சிற்றம்பலத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு நெல் கொள்முதல் நிலைய சுவர் இடிந்து விழுந்தது. இந்த கட்டுமான பணி தரமற்ற நிலையில் உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்

அரசு நெல் கொள்முதல் நிலையம்

தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் செயல்பட்டு வரும் நெல் கொள்முதல் நிலையத்திற்கு, நிரந்தர கட்டிட வசதி செய்து தர வேண்டும் என திருச்சிற்றம்பலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தமிழக அரசுக்கு நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். அதனை ஏற்ற தமிழக அரசு, திருச்சிற்றம்பலம்- பேராவூரணி சாலையில் உள்ள கால்நடை ஆஸ்பத்திரி அருகில் ரூ.68 லட்சம் மதிப்பீட்டில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அண்மையில் கட்டுமான பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தன.

இந்த பணி தொடங்கியதில் இருந்து கட்டுமான பணிகள் தரமற்ற முறையில் மேற்கொள்ளப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர்.

சுவர் இடிந்து விழுந்தது

இந்த நிலையில், நெல் கொள்முதல் நிலையத்திற்கு கட்டப்பட்டு வரும் அடித்தள சுவற்றின் ஒரு பகுதி நேற்று காலை திடீரென இடிந்து விழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த பொதுமக்கள், அங்கு திரண்டு வந்து இடிந்து விழுந்த அடித்தள சுவரை பார்த்து சென்றனர்.

அதனை தொடர்ந்து அருகில் உள்ள குளத்தின் மண்ணை பொக்லின் எந்திரத்தின் உதவியுடன் அள்ளி, சுவர் இடிந்து விழுந்த பகுதியில் போட்டு மூடி உள்ளனர்.

தரமற்ற நிலையில் உள்ளதாக குற்றச்சாட்டு

ரூ. 68 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் திருச்சிற்றம்பலம் அரசு நேரடி கொள்முதல் நிலையம் தரமற்ற முறையில் கட்டப்பட்டு வருகிறது. இடிந்து கிடக்கும் ஒரு பக்க சுவர் போக மீதமுள்ள சுவர்களும் தரமற்ற முறையில் உள்ளதால் அவையும் எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.

எனவே, தஞ்சை மாவட்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலைய கட்டுமான பணிகளை நேரில் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்