அரசுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
காவேரிப்பாக்கம் ஒன்றியத்தில் அரசுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் கரிவேடு ஊராட்சியில் கிராம சாலையையொட்டி, அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலம் 10 ஏக்கர் உள்ளது. இந்த நிலத்தை அப்பகுதியை சேர்ந்த மூன்று பேர் கடந்த 20 வருடங்களாக ஆக்கிரமிப்பு செய்து வந்துள்ளனர். இதுதொடர்பாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் புகார் அளித்துள்ளனர். அதன் பேரில் அரசு அதிகாரிகள் நிலத்தை மீட்கும் பணியை மேற்கொண்டனர். இதனால் தனி நபர்கள் மூன்று பேரும் இதனை எதிர்த்து கடந்த 2017-ல் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளனர். இந்த வழக்கு நடைபெற்று வந்த நிலையில் கடந்த 2021-ல் தனிநபர்களின் மனு கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் நெமிலி தாசில்தார் ரவி தலைமையில், வட்டார வளர்ச்சி அலுவலர் அன்பரசு, அரக்கோணம் துணைபோலீஸ் சூப்பிரண்டு பிரபு ஆகியோர் முன்னிலையில், ஆக்கிரமிப்பாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. அப்போது அவர்கள் பயிரிட்டுள்ள நிலங்களுக்கு மட்டும் மூன்று மாதம் அவகாசம் கேட்டுள்ளனர்.
இதனால் அரசு அதிகாரிகள் பயிரிடப்பட்டுள்ள நிலங்களை தவிர்த்து, எஞ்சியுள்ள நிலங்களை மீட்டனர். இதில் வருவாய் ஆய்வாளர் சீனிவாசன், ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதாதாஸ், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்பட பலர் உடன் இருந்தனர். இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையில் போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.