அரசு அலுவலகங்கள் கட்டிட உரிம சான்று பெற வேண்டும்
பழனியில் அரசு அலுவலகங்கள் கட்டிட உரிமை சான்று பெற வேண்டும் என்று ஆர்.டி.ஓ. சிவக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பழனி வருவாய் கோட்டத்தில் பழனி, ஒட்டன்சத்திரம், வேடசந்தூர், குஜிலியம்பாறை என 4 தாலுகாக்கள் உள்ளன. இங்கு மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரி என ஏராளமான அரசு சார்ந்த கட்டிடங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு பொதுமக்கள் தினமும் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் பழனி கோட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் கட்டிட உரிமச் சான்று பெற இந்த மாத இறுதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஆர்.டி.ஓ. சிவக்குமார் நோட்டீஸ் வழங்கி உள்ளார். அதில் கூறப்பட்டு உள்ளதாவது:-
அரசு ஆணையின்படி அரசு கட்டிடங்கள் தகுதி வாய்ந்த அலுவலரிடம் இருந்து பெறப்பட்ட உரிமத்தின் அடிப்படையில் இயங்க வேண்டும். எனவே பழனி வருவாய் கோட்டத்தில் மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் என மொத்தம் 205 கட்டிடங்கள் உள்ளன. இவை உரிய கட்டிட உரிமச்சான்று பெற வேண்டும்.
மேலும் பள்ளி, கல்லூரி, விடுதி, சமுதாயக்கூடம், வணிக வளாகங்கள், ஓட்டல்கள், மருத்துவமனைகள் ஆகியவற்றிலும் கட்டிட உரிமச்சான்று பெற வேண்டும். சான்று பெறாதவர்கள், கட்டிடத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான அனைத்து வசதிகள் உள்ளனவா? என்பதற்கான அறிக்கையுடன் இந்த மாத இறுதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அவ்வாறு விண்ணப்பிக்கவில்லை என்றால் தமிழ்நாடு கட்டிட உரிம சட்ட விதிகளின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.