மாற்றுத்திறனாளி மாணவனுக்கு தமிழக அரசு உதவி செய்ய வேண்டும்

மாற்றுத்திறனாளி மாணவனுக்கு தமிழக அரசு உதவி செய்ய வேண்டும்

Update: 2022-07-27 20:25 GMT

அய்யம்பேட்டை,

உரிய மருத்துவ சிகிச்சை செய்யவும், படிப்பை தொடரவும் மாற்றுத்திறனாளி மாணவனுக்கு தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் என பெற்றோர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

அறுவை சிகிச்சை

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அருகே பழைய மாத்தூர் வடுகதெருவில் வசித்து வருபவர் செல்வம் (வயது50). கூலித்தொழிலாளி. இவரது மனைவி சரிதா (42). இவர்களுக்கு ஆதித்யா (18) என்ற மகனும், அபிநயா (19), கீர்த்தனா (9) ஆகிய இரண்டு மகள்களும் உள்ளனர். இவர்களது மகன் ஆதித்யா 5-ம் வகுப்பு படித்து கொண்டிருக்கும் போது பள்ளத்தில் தவறி விழுந்து விட்டான். அன்று முதல் இவனால் சரிவர நடக்க முடியாமல் போனது. இதற்கு பல டாக்டர்களிடம் சிகிச்சை பெற்றும் எவ்வித பலனும் இல்லை.

இவரது வலது கால் மூட்டின் மேற்பகுதியில் கேன்சர் கட்டி இருப்பதாக கூறி அறுவை சிகிச்சை செய்து முழங்கால் மூட்டினை அகற்றி விட்டனர். தற்போது ஆதித்யா மாத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் 10- ம் வகுப்பு படித்து வருகிறார். மாற்றுத்திறனாளியான இவர் தினந்தோறும் பள்ளிக்கு செல்லும்போது நடப்பதற்கு சிரமப்பட்டு ஊன்றுகோலோடு சென்று கல்வி பயின்று வருகிறார்.

பல லட்சம் ரூபாய் செலவு

இந்த மாணவருக்கு மீண்டும் முழங்கால் மூட்டு வைத்து மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கு பல லட்சம் ரூபாய் செலவாகும் என டாக்டர்கள் தெரிவித்தனர். எனவே தங்கள் மகனின் மருத்துவ சிகிச்சைக்கு அரசு உதவ வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து மாற்றுத்திறனாளி ஆதித்யாவின் பெற்றோர்கள் கூறுகையில், தினந்தோறும் கூலி வேலைக்கு சென்று வாழ்வாதாரம் இன்றி மூன்று குழந்தைகளையும் படிக்க வைத்து பல்வேறு சிரமங்களுக்கிடையே போராடி வருகிறோம்.

அரசு உதவி செய்ய வேண்டும்

மாற்றுத்திறனாளியான ஆதித்யா நன்றாக நடப்பதற்கு உரிய அறுவை சிகிச்சை செய்வதற்கும், கல்வி படிப்பை தொடர்வதற்கும் தமிழக அரசு உதவி செய்ய வேண்டும். இது குறித்து மாவட்ட கலெக்டரிடமும் கோரிக்கை மனு அளித்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்