தொகுப்பூதியத்தில் பணியாற்றுவோருக்கு அரசு வேலை; சட்டசபையில் முதல்-அமைச்சர் அறிவிப்பு

மாற்றுத்திறனாளிகளுக்கான காலிப் பணியிடங்கள் ஓராண்டில் நிரப்பப்படும். தொகுப்பூதியத்தில் பணியாற்றுவோருக்கு விதிகளை திருத்தி அரசு வேலை வழங்க நடவடிக்கை உள்ளிட்ட சலுகைகள் சட்ட சபையில் முதல்-அமைச்சர் சார்பில் அறிவிக்கப்பட்டது.

Update: 2023-04-18 00:12 GMT

சென்னை,

தமிழக சட்டசபையில் நேற்று மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மானியத்தின் மீது எம்.எல்.ஏ.க்கள் விவாதித்தனர். அவர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் சமூகநலத்துறை அமைச்சர் கீதாஜீவன் பதிலுரை வழங்கினார். அதன் பின்னர் முதல்-அமைச்சர் சார்பில் கீதாஜீவன் வெளியிட்ட அந்த துறைகளுக்கான அறிவிப்புகள் வருமாறு:-

ஸ்கூட்டர்

* மாற்றுத்திறனாளிகளுக்கு அரசால் ஒதுக்கப்பட்ட வீடுகளுக்கு, பயனாளியின் பங்கு தொகையை செலுத்துவதற்காக வட்டியில்லா வங்கி கடன் உதவி வழங்கும் திட்டத்தின் மூலம் ஆயிரம் பேர் பயனடையும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படும்.

* உயர்கல்வி பயிலும் ஆயிரம் பார்வை மாற்றுத்திறன் மாணவர்களுக்கு தலா ரூ.14 ஆயிரம் மதிப்பில் நவீன வாசிக்கும் கருவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.

* ஒரு கால் பாதிப்படைந்த மாற்றுத்திறனாளிகளும் பயன் பெறும் வகையில் இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கும் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு 500 பயனாளிகளுக்கு வழங்கப்படும்.

* உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் கட்டப்படும் வணிக வளாகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஐந்து சதவீதம் ஒதுக்கீடு செய்யப்படும். மொத்த அலகுகள் 20-க்கு குறைவாக இருந்தால் மாற்றுத்திறனாளிகளுக்கு குறைந்தபட்சம் ஒரு அலகு ஒதுக்கீடு செய்யப்படும்.

மதிப்பூதியம் உயர்வு

* தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தின் மூலமாக வழங்கப்பட்டு வரும் விபத்து, நிவாரணம், மருத்துவம், கல்வி மற்றும் இதர உதவித்தொகையை உயர்த்தி கூடுதலாக ரூ.2 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.

* செவி மாற்றுத்திறனாளிகள் பயனடையும் வகையில், ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் வாயிலாக சைகை மொழிபெயர்ப்பாளர் பயிற்சி அளிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும். அரசு நடத்தும் கூட்டங்களில் செவி மாற்றுத்திறனாளிகளுக்கும், மற்றவர்களுக்கும் இடையேயான கருத்து பரிமாற்றத்தை எளிதாக்க இந்த திட்டம் உதவும். இதன்படி 100 பேருக்கு பயிற்சி அளிக்கப்படும்.

* மாற்றுத்திறனாளிகளின் சேவையில் ஈடுபட்டுள்ள அரசு நிதி உதவி பெறும் 92 ஆரம்பநிலை பயிற்சி மையங்கள் மற்றும் 56 மறுவாழ்வு இல்லங்கள், அறிவுசார் மாற்றுத்திறனாளிக்கான 70 பராமரிப்பு இல்லங்களில் பணிபுரியும் 1,011 பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மதிப்பூதியம் உயர்த்தி வழங்கப்படும். அதன்படி சமூக பணியாளர்களுக்கு ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.12 ஆயிரமாகவும்; துணை செவிலியருக்கு ரூ.5,500-ல் இருந்து ரூ.10 ஆயிரமாகவும்; தொழிற்பயிற்றுனர் மற்றும் விடுதி காப்பாளருக்கு ரூ.4 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாகவும்; இரவு காவலருக்கு ரூ.4 ஆயிரத்தில் இருந்து ரூ.8 ஆயிரமாகவும்; உதவி சமையலருக்கு ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.6 ஆயிரமாகவும்; துப்புரவு பணியாளர்களுக்கு ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.5 ஆயிரமாகவும்; பராமரிப்பு உதவியாளர்களுக்கு ஆயிரம் ரூபாயில் இருந்து ரூ.4,500 ஆகவும் உயர்த்தி வழங்கப்படும்.

பின்னடைவு பணியிடம்

* அரசு நிதி உதவியுடன் தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படும்326 சிறப்பு பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறன் குழந்தைகளை பராமரிக்க எதுவாக மாதந்தோறும் ரூ.4,500 மதிப்பூதியத்தில் பராமரிப்பு உதவியாளர்களை நியமனம் செய்யயும் திட்டம் செயல்படுத்தப்படும்.

* மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் செயல்படும் 10 அரசு மறுவாழ்வு இல்லங்களில், தொழுநோயால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்து தங்கி உள்ள 592 மாற்றுத்திறனாளிகள் பயனடையும் வகையில், உணவூட்டு மானியத்தை ரூ.42-லிருந்து ரூ.100 ஆக உயர்த்தப்படும்.

* மனநலம் பாதிக்கப்பட்டு குணம் அடைந்தவர்களை மீண்டும் சமுதாயத்தில் ஒருங்கிணைப்பதற்காக மீண்டும் இல்லம் எனும் புதிய திட்டத்தை முதல்கட்டமாக 5 மாவட்டங்களில் அறிமுகப்படுத்தி, ஒரு மாவட்டத்திற்கு 2 இல்லங்கள் வீதம் 10 இல்லங்கள், 40 பேர் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்படும்.

* மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் அரசு துறைகளில் உள்ள பின்னடைவு காலிப்பணியிடங்களை ஓராண்டிற்குள் நிரப்புவதற்கு அந்தந்த துறைகள் மூலம் பணி இடங்களை நிர்ணயம் செய்து, சிறப்பு ஆட்சேர்ப்பு நடத்தப்பட்டு, பணி வாய்ப்புகள் வழங்கப்படும். இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தொகுப்பூதியத்தின் கீழ் பணியாற்றி வரும் மாற்றுத்திறனாளிகளும் சிறப்பு ஆள்சேர்ப்பு தேர்வில் பங்கேற்கும் வகையில் அந்தந்த துறைகளின் விதிகளுக்கு உட்பட்டு வயது வரம்பு மற்றும் தேர்வு விதிகளை தளர்வு செய்வதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மதிய உணவு விரிவாக்கம்

* மாற்றுத்திறன் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித்தொகையை 2 மடங்காக உயர்த்தி 22 ஆயிரத்து 300 மாணவர்கள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

* மனநலம் சார் மற்றும் அறிவு சார்ந்த மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் 150 பயனாளிகள் பயன்பெறும் வகையில் 4 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு 3 இல்லங்கள் கட்டப்படும்.

* அரசு நிதி உதவியுடன் தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படும் சிறப்பு பள்ளிகள் மற்றும் ஆரம்ப நிலை பயிற்சி மையங்களில் பயிலும் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு இணை உணவு மற்றும் மதிய உணவு வழங்கும் திட்டம் விரிவுபடுத்தப்படும்.

இவ்வாறு அவர் அறிவித்தார்.

மேலும் கோட்ட அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கு 39 ஒருங்கிணைந்த சேவை மையங்கள் தொடங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் சமூகநலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் சட்டசபையில் நேற்று தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்