பள்ளிகளை தரம் உயர்த்தியதால் அரசுக்கு கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு
கடந்த ஆட்சி காலத்தில் நெறிமுறைகளை பின்பற்றாமல் பள்ளிகளை தரம் உயர்த்தியதால் அரசுக்கு கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டு உள்ளதாக சட்டமன்ற பொதுக் கணக்கு குழு தலைவர் செல்வபெருந்தகை கூறினார்.
கடந்த ஆட்சி காலத்தில் நெறிமுறைகளை பின்பற்றாமல் பள்ளிகளை தரம் உயர்த்தியதால் அரசுக்கு கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டு உள்ளதாக சட்டமன்ற பொதுக் கணக்கு குழு தலைவர் செல்வபெருந்தகை கூறினார்.
ஆய்வு கூட்டம்
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் 2021-2023-ம் ஆண்டிற்கான தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொதுக்கணக்கு குழு ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது.
சட்டமன்ற பொதுக்கணக்கு குழு தலைவர் செல்வபெருந்தகை தலைமை தாங்கினார்.
ஆய்வில் வேளாண் உழவர் நலத்துறை, பள்ளிக்கல்வித்துறை, கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, சுற்றுலா, பண்பாடு அறநிலையங்கள் துறை, வணிக வரி மற்றும் பதிவுத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, நீர்வளத்துறை ஆகிய துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு அதற்கான பயன்பாடு குறித்து விரிவான அறிக்கையினை அவர் கேட்டறிந்தார்.
பின்னர் அவர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பள்ளிகளை தரம் உயர்த்துவதற்கு சில வழிகாட்டு நெறிமுறைகள் இருக்கின்றன. இந்த நெறிமுறைகளை கடந்த ஆட்சி காலத்தில் பின்பற்றாமல் பள்ளிகளை தரம் உயர்த்தி உள்ளார்கள்.
இதனால் அரசுக்கு கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. இதைபற்றி கூட்டத்தில் விவாதித்து உள்ளோம்.
அதேபோன்று தற்போது உள்ள பள்ளிகளை தரம் உயர்த்துவது கடந்த காலங்கள் போன்று இல்லாமல் தற்போது உள்ள அரசு வழிகாட்டுதல் முறைப்படி தரம் உயர்த்த வேண்டும் என்று அறிவுரை வழங்கி உள்ளோம்.
காமராஜருக்கு பெருமை
சிறு விவசாயிகளுக்கு மானியத் தொகையில் டிராக்டர்கள் வழங்கப்படுகிறது. இந்த டிராக்டர்கள் சம்பந்தப்பட்டவர் 4 ஆண்டுகள் பயன்படுத்த வேண்டும். மானியத்துடன் டிராக்டர் வாங்கி விட்டு 2 ஆண்டுகளில் டிராக்டர்களை விற்பனை செய்து உள்ளனர்.
அவர்கள் அந்த மானிய தொகையை அரசுக்கு திரும்ப செலுத்த வேண்டும். அதனை வசூல் செய்யவில்லை என்றால் கிரிமினல் நடைமுறை சட்டத்தின் படி வழக்காக கொண்டு செல்லப்படும்.
திருவண்ணாமலையில் மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு செய்த போது தமிழகத்திலேயே இல்லாத அளவிற்கு 6, 7 ஆண்டுகளாக 100 சதவீதத்திற்கு மேல் பள்ளிகளில் மாணவிகளை சேர்த்து உள்ளனர்.
இது கல்வி கண்ணை திறந்த காமராஜருக்கு பெருமை தேடி தந்த மாவட்டமாக உள்ளது. பள்ளிக்கல்விதுறையில் திருவண்ணாமலை மாவட்டம் சிறப்பாக உள்ளது என்பதற்கு இது ஒரு எடுத்துகாட்டாக உள்ளது.
மேலும் பள்ளியில் சேர பல மாணவிகள் விருப்பம் தெரிவித்து உள்ளதால் அந்த பள்ளியில் சிறப்பு நிதியின் மூலம் புதிய கட்டிடங்கள் அமைக்க பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.
கடல் அளவு ஊழல்
கடந்த ஆட்சி காலத்தில் கடல் அளவில் ஊழல் நடைபெற்று உள்ளது. மருந்து, ஆவின் பால், ஸ்மார்ட் சிட்டியில் ஊழல் என எல்லாத்திலும் ஊழல் செய்து உள்ளனர். திட்டமிடாமல் பல திட்டங்களை அவர்கள் செயல்படுத்தி உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, கலெக்டர் முருகேஷ், எம்.எல்.ஏ.க்கள் வேல்முருகன் (பண்ரூட்டி), ராஜா (சங்கரன்கோயில்), பிரகாஷ் (தளி), மு.பெ.கிரி (செங்கம்), பெ.சு.தி.சரவணன் (கலசபாக்கம்), ஜோதி (செய்யாறு), ஊரக வளர்ச்சி இணை செயலாளர் தேன்மொழி, துணை செயலாளர் ரேவதி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், மாவட்ட வன அலுவலர் அருண்லால், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி மற்றும் அரசு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
உணவின் தரம்
முன்னதாக குழுவினர் திருவண்ணாமலை நகராட்சி மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு முறை குறித்தும், உணவுப் பொருட்கள் இருப்புவிவரம், இருப்பு பதிவேட்டின் விவரம், வருகை பதிவேட்டின் படி மாணவர்களின் எண்ணிக்கை, மாணவிகளின் கல்வித் தரம் பற்றியும், மாணவிகளிடம் அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, மின் விளக்குகள், மின்விசிறிகள், மின்சார சாதனங்கள் பயன்பாட்டில் உள்ளதா என்றும் ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து அத்தியந்தல் கிராமத்தில் உள்ள மாநில விதைப்பண்ணையிலும் ஆய்வு செய்தனர்.