மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு ஊழியருக்கு ஆயுள் தண்டனை

மகளுக்கு பாலியல் ெதால்லை கொடுத்த அரசு ஊழியருக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

Update: 2023-08-16 17:43 GMT

மகளுக்கு பாலியல் தொல்லை

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 47 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் அரசு ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் தனது 14 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும் இதனை வெளியில் சொல்லாமல் இருக்குமாறு மிரட்டியிருக்கிறார். இந்த விவகாரம் சிறுமியின் தாய்க்கு தெரிய வந்ததால் அவர் அதிர்ச்சியடைந்தார்.இதுகுறித்து அவர் அறந்தாங்கி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு ஊழியரை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

ஆயுள் தண்டனை

வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி (பொறுப்பு) ஜெயந்தி இன்று தீர்ப்பளித்தார். இதில் அந்த அரசு ஊழியருக்கு போக்சோ பிரிவில் ஆயுள் தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும், கொலை மிரட்டல் விடுத்ததற்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும் அபராத தொகையை பாதிக்கப்பட்ட சிறுமிக்கும், இழப்பீட்டு தொகையாக ரூ.2½ லட்சம் அரசு தரப்பில் வழங்கவும் உத்தரவிட்டார். இதையடுத்து தண்டனை விதிக்கப்பட்ட அரசு ஊழியரை திருச்சி மத்திய சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்