அரசு கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி குத்தாலம் அரசு கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே மாதிரிமங்கலம் கிராமத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வட்டார சேவை மையத்தில் இயங்கி வருகிறது. இந்த கல்லூரிக்கு புதிய கட்டிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கல்லூரி மாணவர்கள் இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் சாலை மறியல் மற்றும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தநிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட மணிபாரதி, ரஞ்சித், பிரகாஷ் ஆகிய 3 மாணவர்களை கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்டு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
இதற்கு கண்டனம் தெரிவித்தும், அந்த மாணவர்களின் சஸ்பெண்டு உத்தரவை ரத்து செய்யக்கோரியும், கல்லூரிக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தியும், குத்தாலம் கடைவீதியில் இந்திய மாணவர் சங்கத்தினர் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கல்லூரி மாணவ-மாணவிகள் திரளாக கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தையொட்டி குத்தாலம் கடைவீதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதாராணி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.