அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரி கொண்டு வரப்படும்
கே.வி.குப்பம் பகுதிக்கு அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரி கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் துரை முருகன் தெரிவித்தார்.
சைக்கிள் வழங்கும் விழா
கே.வி.குப்பம் தாலுகாவில் உள்ள வேப்பங்கனேரி, லத்தேரி ஆகிய பகுதிகளில் மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கே.வி.குப்பம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் கே.வி.குப்பம் ஆண்கள், மகளிர் மேல்நிலைப் பள்ளிகள், வடுகந்தாங்கல், கொசவன்புதூர், பில்லாந்திப்பட்டு, குடியாத்தம் ஆர்.எஸ்.மேல்நிலைப் பள்ளிகளை சேர்ந்த 609 மாணவ- மாணவிகளுக்கும், லத்தேரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் லத்தேரி ஆண்கள், மகளிர் மேல்நிலைப் பள்ளிகள், பனமடங்கி, வஞ்சூர், செஞ்சி மேல்நிலைப்பள்ளிகளைச் சோ்ந்த மாணவ- மாணவிகள் 354 பேருக்கும் விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட உதவி திட்ட அலுவலர் மகாலிங்கம் முன்னிலை வகித்தார். பள்ளித் தலைமை ஆசிரியர்கள் எஸ்.ஆனந்தன், வி.எக்ஸ்.ஜெயசீலிகிறிஸ்டி ஆகியோர் வரவேற்றனர். அணைக்கட்டு எம்.எல்.ஏ. ஏ.பி.நந்தகுமார் வாழ்த்துரை வழங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு 963 மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
கலை அறிவியல் கல்லூரி
டென்மார்க், நார்வே, சுவீடன், பின்லாந்து போன்ற மேற்கத்திய நாடுகளில் கார்கள் குறைவு, நூற்றுக்கணக்கான மக்கள் அங்கு சைக்கிளை பயன்படுத்துகிறார்கள். இதனால் அவர்களுக்கு உடல் உறுதி போன்ற நன்மைகள் கிடைக்கிறது. லத்தேரி பஸ்நிலையம் பகுதிகளில் சாலை ஓர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு அழகாய் இருந்தது. தற்போது மீண்டும் ஆக்கிரமிப்பு பெருகி உள்ளது. இதை கலெக்டர் உடனடியாக தலையிட்டு அகற்ற வேண்டும்.
நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து, லத்தேரி மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு கலையரங்கம் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும். கே.வி.குப்பம் பகுதிக்கு விரைவில் மகளிர் கலை அறிவியல் கல்லூரி கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கல்லூரி கொண்டு வர நான் ரெடி, நீங்க ரெடியா? என்று ஐந்து விரலை விரித்து காட்டி வாக்கு சேகரிப்பது போல் சூசகமாக பேசினார்.
விழாவில் ஒன்றியகுழுத் தலைவர் லோ.ரவிச்சந்திரன், துணைத் தலைவர் பாரதி வெங்கடேசன், ஊராட்சி குழு உறுப்பினர் கவிதாசுதாசேகர், ஒன்றிய குழு உறுப்பினர்கள் கே.சீதாராமன், ஜெயாமுருகேசன், சரளாகலைவாணன், ஊராட்சி மன்ற தலைவர்கள் எஸ்.வி.கே.மோகன், டி.மோகன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர்கள் நந்தகோபால், குப்பன், ஊராட்சி செயலாளர் விஸ்வநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆசிரியர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.