சாலையோரத்தில் நிறுத்தப்படும் அரசு பஸ்கள்

தமிழக-கேரள எல்லையான பாட்டவயலில் சாலையோரத்தில் அரசு பஸ்களை நிறுத்துவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர்.

Update: 2022-11-13 18:45 GMT

பந்தலூர், 

தமிழக-கேரள எல்லையான பாட்டவயலில் சாலையோரத்தில் அரசு பஸ்களை நிறுத்துவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர்.

அரசு பஸ்கள்

பந்தலூர் அருகே பாட்டவயல் தமிழக-கேரள மாநில எல்லையில் உள்ளது. கூடலூர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கிளையில் இருந்து தேவர்சோலை, நெலாக்கோட்டை வழியாகவும், நாடுகாணி, தேவாலா. பந்தலூர், உப்பட்டி, முக்கட்டி, பிதிர்காடு வழியாகவும் பாட்டவயல், கல்பெட்டா, அய்யன்கொல்லிக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. சுல்தான்பத்தேரியில் இருந்து பாட்டவயலுக்கு கேரள அரசு பஸ்கள், தனியார் பஸ்கள் இயக்கப்படுகிறது. இதுதவிர கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதிகளில் இருந்து தனியார் வாகனங்கள், சரக்கு வாகனங்கள் சுல்தான்பத்தேரிக்கு சென்று வருகின்றன. இதற்கிடையே பாட்டவயல் பகுதியில் உள்ள சாலை அகலம் குறைவாக உள்ளது. இதனால் அரசு பஸ்கள் அய்யன்கொல்லி செல்லும் சாலையோரத்திலும், சுல்தான்பத்தேரி செல்லும் சாலையோரத்திலும் நிறுத்தப்பட்டு வருகின்றன. சாலையோரங்களில் பயணிகள் காத்திருந்து, அத்தியாவசிய பணிகள் மற்றும் தேவைகளுக்காக பஸ்களில் சென்று வருகின்றனர்.

போக்குவரத்து பாதிப்பு

மேலும் பஸ்கள் அடிக்கடி சாலையோரம் நிறுத்தப்படுவதால், சாலையில் மற்ற வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. பாட்டவயலில் கூடலூர், பந்தலூர் செல்லும் பஸ்கள் நிறுத்தும் இடத்தில் கிராம நிர்வாக அலுவலகம் அருகே குழி உள்ளது. அந்த குழியில் வாகனங்கள் சிக்கி வருவதோடு, விபத்துகளுக்கு நிகழ்கிறது. அங்கு பஸ்களை திருப்புவதற்கு போதிய இடவசதி இல்லை. இதனால் வாகன ஓட்டிகள் மட்டுமின்றி, பயணிகளும் அவதி அடைந்து வருகிறார்கள்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

பாட்டவயலில் அரசு பஸ்களை திருப்பும் போது விபத்துகள் ஏற்படுகிறது. தமிழக எல்லைக்கு கூடலூர், பந்தலூரில் இருந்து வரும் பஸ்கள் சாலையோரங்களில் நிறுத்தப்பட்டு, பின்னர் மற்ற இடங்களுக்கு செல்கிறது. போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதால், போலீஸ் சோதனைச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுபடும் போலீசாருக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே, சாலையோரத்தில் உள்ள குழியை மூடுவதோடு, சாலையை அகலப்படுத்த சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். 

Tags:    

மேலும் செய்திகள்