பஸ் நிலையத்துக்குள் வராமல் செல்லும் அரசு பஸ்கள்
வால்பாறையில் பஸ் நிலையத்துக்குள் அரசு பஸ்கள் வராமல் செல்வதால் பயணிகள் அவதியடைந்து உள்ளனர்.
வால்பாறை,
வால்பாறையில் பஸ் நிலையத்துக்குள் அரசு பஸ்கள் வராமல் செல்வதால் பயணிகள் அவதியடைந்து உள்ளனர்.
பஸ் நிலையம்
வால்பாறையில் புதிய பஸ் நிலையம் உள்ளது. அந்த பஸ் நிலையம் செயல்பாட்டில் இருந்த போது, வளாகத்தில் கழிப்பிட வசதி இருந்தது. அந்த கழிப்பிடத்தை பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் பயன்படுத்தி வந்தனர். கடந்த சில ஆண்டுகளாக பஸ் நிலையம் செயல்படாமல் இருக்கிறது. இதனால் பஸ் நிலையத்திற்குள் பஸ்கள் வருவது இல்லை.
உள்ளே சென்று பயணிகள் ஏற்றி செல்லப்படாமல், நிலையத்திற்கு வெளியே சாலையோரம் நிறுத்தி ஏற்றி செல்லப்பட்டு வருகிறது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. மேலும் வெளிப்பகுதியில் கழிப்பிட வசதி இல்லை. வால்பாறை மற்றும் சுற்றுப்புறங்களுக்கு பஸ்களில் செல்ல வருகிறவர்கள் திறந்தவெளியில் இயற்கை உபாதைகளை கழித்து வருகின்றனர். நீதிமன்றம் அருகே நகராட்சி சமுதாய கூடத்திற்கு செல்லும் வழியில் நகராட்சிக்கு சொந்தமான கழிப்பிடம் உள்ளது.
பயணிகள் அவதி
ஆனால், அங்கு கதவுகள், மின் இணைப்பு உள்ளிட்ட வசதி இல்லை. இதனால் இரவு நேரத்தில் கழிப்பிடம் செல்ல பெண்கள், குழந்தைகள் பயப்படுகின்றனர். இதனால் அவர்கள் அவதி அடைந்து வருகிறார்கள். திறந்தவெளியை பயன்படுத்துவதால் கடும் தூர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. இருக்கை வசதி இல்லாததால் பயணிகள் நீண்ட நேரம் கால் கடுக்க காத்திருக்கின்றனர்.
எனவே, பஸ் நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வந்து பயணிகளுக்கு தேவையான கழிப்பிடம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க அரசு போக்குவரத்து கழக நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது பராமரிப்பு இல்லாமல் காணப்படும் நகராட்சி கழிப்பிடத்தை அனைத்து வசதிகளுடன் பராமரித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். மேலும் பஸ் நிலையத்திற்குள் அரசு பஸ்கள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.