ஜல்லிபட்டிக்கு அரசு பஸ் சேவை தொடக்கம்

கொடைரோட்டில் இருந்து ஜல்லிபட்டிக்கு அரசு பஸ் சேவை தொடங்கப்பட்டது.

Update: 2023-05-29 19:00 GMT

கொடைரோடு அருகே ஜம்புதுரைக்கோட்டை ஊராட்சி, ஜல்லிபட்டியில் கடந்த மே 1-ந்தேதி நடந்த கிராமசபை கூட்டத்தில் வேலுச்சாமி எம்.பி.யிடம் அரசு பஸ் இயக்க வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து 'தினத்தந்தி'யில் செய்தி வெளியானது. இதையடுத்து கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று, அரசு பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன் தொடக்க விழா ஜல்லிபட்டியில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு வேலுச்சாமி எம்.பி. தலைமை தாங்கி புதிய பஸ் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார். விழாவில் ஜம்புதுரைக்கோட்டை ஊராட்சி தலைவர் பவுன்தாய் காட்டுராஜா, நிலக்கோட்டை ஒன்றிய தி.மு.க. செயலாளர் சவுந்திரபாண்டியன், தி.மு.க. நிர்வாகிகள் கணேஷ்குமார், ஆரோக்கியம், பெனிட் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த பஸ் கொடைரோட்டில் இருந்து கொழிஞ்சிபட்டி, ஜல்லிபட்டி, சக்கைய நாயக்கனூர், காமலாபுரம் வழியாக திண்டுக்கல் சென்று அடைகிறது. தினமும் காலை, மாலை என இருவேளைகளில் பஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்