விருத்தாசலத்தில்அரசு பஸ் கவிழ்ந்து 23 பேர் காயம் :அச்சு முறிந்து சாலையில் சக்கரம் ஓடியதால் பரபரப்பு

விருத்தாசலத்தில் அரசு பஸ் கவிழ்ந்து 23 பேர் காயமடைந்தனர். அச்சு முறிந்து சாலையில் சக்கரம் ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-09-18 18:45 GMT


விருத்தாசலம், 

சேலத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு கடலூர் மாவட்டம் நெய்வேலிக்கு நேற்று முன்தினம் இரவு அரசு பஸ் ஒன்று புறப்பட்டது. பஸ்சை பெரம்பலூர் வேப்பந்தட்டை அருகே உள்ள சிறுநிலா கிராமத்தை சேர்ந்த வரதராஜன்(வயது 50) என்பவர் ஓட்டினார். கண்டக்டராக சேலம் தலைவாசல் அருகே உள்ள புனல்வாசல் கிராமத்தை சேர்ந்த ஜெயபாலன் (42) என்பவர் பணியில் இருந்தார். பஸ்சில் 40 பயணிகள் பயணம் செய்தனர்.

இந்த பஸ் நேற்று காலை 5.30 மணிக்கு விருத்தாசலம் மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோவில் அருகில் வந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தேசிய நெடுஞ்சாலையின் நடுவில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புக்கட்டையில் மோதியது.

23 பேர் காயம்

மோதிய வேகத்தில் பஸ் சக்கரத்தின் அச்சு முறிந்து பின்னால் உள்ள சக்கரம் தனியாக கழன்று ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அந்த பஸ் நடுரோட்டில் கவிழ்ந்தது. இதனால் இடிபாட்டுக்குள் சிக்கிய பயணிகள் கூச்சலிட்டனர்.

விபத்து பற்றி தகவல் அறிந்ததும் விருத்தாசலம் போலீசார், அந்த பகுதி மக்களின் உதவியுடன் பஸ்சுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். விபத்தில் காயமடைந்த டிரைவர் வரதராஜன், கண்டக்டர் ஜெயபாலன், பயணிகளான நெய்வேலியை சேர்ந்த கோவிந்தராஜ், பண்ருட்டி கரன்சிங், கத்தாழை புனிதவள்ளி, வடலூர் ஜோதிலட்சுமி உள்ளிட்ட 23 பேர் மீட்கப்பட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகிறார்கள். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

எச்சரிக்கை விளக்கு இல்லை

கடலூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மணவாளநல்லூர், பரவலூர் விளாங்காட்டூர், சித்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்கள் விபத்து தடுப்பு பகுதிகளாக அறிவிக்கப்பட்டு அப்பகுதிகளில் சாலைகளை அகலப்படுத்தி சாலைகளின் நடுவே தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த தடுப்பு கட்டைகள் இருக்கும் இடங்களில் வாகன ஓட்டிகளுக்கு தெரியும் வகையில் இரவில் ஒளிரும் மின்விளக்குகள் எதுவும் அமைக்கப்படவில்லை.

இதனால் விபத்துக்கள் அடிக்கடி நேர்ந்து வருகிறது. ஆகையால் இதுபோன்ற விபத்துக்களை தடுக்க, தேவையான விபத்து தடுப்பு எச்சரிக்கை மின்விளக்குகளை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்