4 கிராமங்களுக்கு முதல் முறையாக அரசு பஸ் இயக்கம்
4கிராமங்களுக்கு முதல்முறையாக அரசு பஸ் இயக்கப்பட்டதால், கிராம மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
தினத்தந்தி' செய்தி எதிரொலியாக திருக்குவளை அருகே 4 கிராமங்களுக்கு முதல்முறையாக அரசு பஸ் இயக்கப்பட்டதால், கிராம மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
பஸ்வசதி இல்லை
நாகை மாவட்டம் திருக்குவளை தாலுகா மேலவாழக்கரை ஊராட்சியில் ஏர்வைக்காடு கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சுற்றி, ராமன்கோட்டகம், தெற்குப்பனையூர், நாட்டிருப்பு உள்ளிட்ட கிராமங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த கிராமங்களுக்கு பஸ் வசதி இல்லாததால் மருத்துவ சிகிச்சைக்காகவும், மாணவ, மாணவிகள் மேல்நிலை பள்ளிப்படிப்புக்காகவும் 5 கிலோ மீட்டர் தூரம் உள்ள திருக்குவளைக்கு நடந்து வந்து பஸ்சில் ஏறி செல்ல வேண்டிய நிலை இருந்து வந்தது.
மாணவ-மாணவிகள் சிரமம்
இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கும் செல்லும் தொழிலாளர்கள் தினந்தோறும் அவதிக்குள்ளாகி வந்தனர்.
பஸ்வசதி இல்லாததால் இந்த கிராமங்களை சேர்ந்த வாலிபர்களுக்கு திருமணத்திற்கு பெண் கொடுக்க முன்வருவதில்லை. இதனால் பெரும்பாலானோர் ஊரையே காலி செய்து விட்டு வெளியூர்களுக்கு சென்று விட்டனர்.
என ஏர்வைக்காடு, ராமன்கோட்டகம், தெற்குப்பனையூர், நாட்டிருப்பு ஆகிய 4 கிராமங்களுக்கு அரசு பஸ் இயக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். இது குறித்த செய்தி 'தினத்தந்தி' நாளிதழில் கடந்த 19-ந்தேதி படத்துடன் வெளியானது. இதன் எதிரொலியாக, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் உத்தரவிட்டார். இதையடுத்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
புதிய பஸ் சேவை
இதை தொடர்ந்து ஏர்வைக்காடு கிராமத்தில் இருந்து மேற்கண்ட கிராமங்களுக்கு புதிய அரசு பஸ் நேற்று இயக்கப்பட்டது. இதன் தொடக்க விழாவுக்கு கலெக்டர் அருண் தம்புராஜ், தமிழக மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் ஆகியோர் தலைமை தாங்கி, கொடியசைத்து புதிய பஸ் சேவையை தொடங்கி வைத்தனர். தொடர்ந்து அவர்கள் பஸ்சில் பொதுமக்களுடன் பயணம் செய்தனர்.
இதில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பொது மேலாளர் மகேந்திரகுமார், துணை மேலாளர் சிதம்பரகுமார், திருக்குவளை ஊராட்சி மன்ற தலைவர் பழனியப்பன், வாழக்கரை ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செழியன், கோட்டமேலாளர் தமிழ்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
முன்னதாக கிராம பெண்கள் தங்கள் கிராமத்துக்கு முதன்முறையாக வந்த பஸ்சுக்கு ஆரத்தி எடுத்தனர். தொடர்ந்து வாலிபர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த கலெக்டருக்கு கிராம மக்கள் நன்றியை தெரிவித்தனர்.
----