இரும்பு 'ஆர்ச்' மீது அரசு பஸ் மோதி விபத்து
திருவாரூர் கமலாலயக் குளத்தின் தெற்கு கரையில் இருந்த இரும்பு ஆர்ச் மீது அரசு பஸ் மோதி விபத்து ஏற்பட்டது.
திருவாரூர் கமலாலயக் குளத்தின் தெற்கு கரையில் இருந்த இரும்பு ஆர்ச் மீது அரசு பஸ் மோதி விபத்து ஏற்பட்டது.
கமலாலய குளம்
திருவாரூர் தியாகராஜர் கோவிலின் மேற்கு கோபுர வாசலுக்கு எதிரே பிரம்மாண்டமாக காட்சி அளிக்கிறது கமலாலய குளம். குளத்தின் நடுவே நாகநாதர் கோவில் உள்ளது. 2012-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பெய்த மழையில் கமலாலய குளத்தின் வடகரை பகுதி இடிந்து விழுந்தது. இதைத்தொடர்ந்து மேல்கரை பகுதியும் இடிந்தது. இதனால் கனரக வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டது.
பின்னர் குளத்தின் கரைகள் சீரமைக்கப்பட்டு பாதுகாப்பு கருதி இந்த பகுதி வழியாக கனகர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது கமலாலய குளத்தின் வடகரை வழியாக கனரக வாகனங்கள் செல்லாமல் இருக்க துர்க்காலயா ரோடு மின்வாரிய அலுவலகம் அருகில் எச்சரிக்கை பலகை, தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது.
அரசு பஸ் மோதியது
மேலும் கரையின் தெற்கு பகுதியிலும், மேற்கு பகுதியிலும் ஆர்ச் போன்று இரும்பு தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் திருவாரூர்-தஞ்சை சாலை அமைக்கும் பணிகள் நடைபெறுவதால் கும்பகோணம் செல்லும் பஸ்கள் கமலாலய தெற்கு வீதி வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன.
இந்த நிலையில் நேற்று இரவு திருவாரூரில் இருந்து கும்பகோணம் சென்ற அரசு பஸ், கமலாலய குளத்தின் தெற்கு கரையில் உள்ள இரும்பு ஆர்ச் மீது மோதியது. இதில் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் சிலர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களை அக்கம், பக்கத்தினர் மீட்டு திருவாரூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.