வீழ்ச்சியடைந்து வரும் தென்னை நார் தொழில் பாதுகாக்க அரசு நடவடிக்கை

வீழ்ச்சியடைந்து வரும் தென்னை நார் தொழிலை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

Update: 2023-10-19 18:45 GMT

கோவை,

இந்திய அளவில் தென்னை நார் தொழிற்சாலைகள் 7,500 முதல் 8 ஆயிரம் வரை இருக்கின்றன. இந்த தொழிற்சாலைகளுக்கு தென்னை மட்டைகள் தான் மூலப்பொருள். தமிழகத்தில் கோவை, திருப்பூர், சேலம், நாகர்கோவில், தென்காசி, பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் உள்பட 27 மாவட்டங்களில் தென்னை நார் தொழில் நடந்து வருகிறது.

கடந்த 2000-ம் ஆண்டுக்கு முன் குடிசை தொழிலாக இருந்த இந்த தொழில் மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்களால் வேகமாக வளர்ந்தது. தென்னை நார் தொழிற்சாலைகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.

18 துறைகளில் தென்னை நார் தொடர்புடைய பொருட்கள் பயன் படுத்தப்படுகின்றன. கடந்த 1996-ம் ஆண்டு தென்னைநார் தொடர்புடைய பொருட்கள் ரூ.110 கோடிக்கு தான் ஏற்றுமதி செய்யப்பட்டது. கடந்த ஆண்டு ரூ.4,500 கோடிக்கு வெளிநாட்டு ஏற்றுமதியும், ரூ.16 ஆயிரம் கோடிக்கு உள்நாட்டு வணிகமும் நடந்து உள்ளது.

இந்த தொழிலை நம்பி இந்தியா முழுவதும் சுமார் 25 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை சுமார் 4 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர். இந்தியாவில் இருந்து தென்னை நார் மற்றும் மதிப்பு கூட்டு பொருட்கள் 40 சதவீதமும், கோகோ பித் (தொட்டி செடிகளுக்கு மண்ணுக்காக பயன்படும் நார் கட்டிகள்) 60 சதவீதமும் ஏற்றுமதி ஆகிறது.

தொழில் வீழ்ச்சி

கடந்த 2019-ம் ஆண்டு மத்திய அரசின் நடவடிக்கையால் 200 முதல் 300 சதவீதம் வரை ஏற்றுமதி வாய்ப்புகள் அதிகரித்தன. அதே நேரத்தில் 2020-ம் ஆண்டிற்கு பிறகு தென்னைநார் தொழில் கடுமையான வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.

உலக பொருளாதார மந்த நிலை, மதிப்பு கூட்டுப்பொருட்கள் தயாரிப்பு இல்லாததாலும், வங்கிகளில் கடனுதவி பெறுவதில் கட்டுப்பாடுகள், தொழிலாளர்கள் பற்றாக்குறை, மூலப்பொருட்கள் விலை ஏற்றம், கன்டெய்னர் வாடகை உயர்வு, மின் கட்டண உயர்வு போன்ற காரணங்களால் இந்தியாவை பொறுத்தவரை 40 சதவீத நார் தொழிற்சாலைகள் மூடக்கூடிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளன.

40 சதவீத நார் தொழிற்சாலைகள் 30 முதல் 50 சதவீதம் வரை தான் உற்பத்தி செய்கின்றன. மீதமுள்ள 20 சதவீத நிறுவனங்கள் மட்டுமே 70 சதவீதம் உற்பத்தி செய்வதாக தெரிகிறது.

வெள்ளை நிற பட்டியலுக்கு மீண்டும் மாற்றம்

தென்னைநார் தொழிற்சாலைகள் மூலம் சுற்றுச்சூழல் மாசுபடுவதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது என்று வெள்ளை நிற பட்டியலில் இருந்து ஆரஞ்சு நிற பட்டியலுக்கு மாற்றப்பட்டது. இதனால் கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்படும் என்பதால் மேலும் தொழிலை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்படும் என்று தென்னைநார் உற்பத்தியாளர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்தனர்.

அதை ஏற்று தற்போது மாநில அரசு தென்னை நார் தொழிற்சாலையை மீண்டும் வெள்ளை நிற பட்டியலுக்கு மாற்றி அரசாணை வெளியிட்டு உள்ளது.

மானியம்

இதற்கிடையில் தென்னை நார் தொழிலை காப்பாற்ற பொள்ளாச்சிக்கு வந்த மத்திய, மாநில அரசுகளின் அதிகாரிகள் கொண்ட உயர்மட்ட குழுவிடம் மனு அளிக்கப்பட்டு உள்ளது. இந்த மனு மீது உரிய பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக அந்த குழுவும் தெரிவித்து சென்றது.

மாநில அரசு தமிழ்நாடு கயிறு வணிக மேம்பாட்டு கழகத்தை அமைத்து தென்னை நார் தொழிலை பாதுகாக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஒருபுறம் ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

மேலும் தென்னைநார் ஏற்றுமதி ஆகாத நாடுகளின் தூதரகங்களுக்கு கடிதம் அனுப்பி தென்னைநார் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி அந்த நாடுகளில் தென்னைநார் பொருட்களை இறக்குமதி செய்வதற்குரிய வாய்ப்புகளை அதிகரிக்க மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.

மதிப்பு கூட்டுப்பொருட்கள் தயாரிக்க பயிற்சியும், ஊக்கத்தொகையும் அளிக்கப்படுகிறது. இதற்கிடையில் காதிகிராம தொழிற்சாலைகள் ஆணையம் மூலமாக தொழிற்சாலைகள் தொடங்க திட்ட மதிப்பு ரூ.50 லட்சம் இருந்தால் 35 முதல் 40 சதவீதம் வரை மானியம் அளிக்கிறது. வெளிநாடுகளில் அரங்கம் அமைத்து தென்னைநார் பொருட்களை விற்பனை செய்வதற்கு ஒரு முறைக்கு ரூ.5 லட்சம் மானியம் அளிக்கிறது. மேலும் தென்னைநார் தொழிலை காப்பாற்றவும், மீண்டும் அந்த தொழிலை புத்துயிர் பெற வைக்கவும் மத்திய, மாநில அரசுகள் முயற்சி மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்