டாஸ்மாக் ஊழியரை வெட்டியவர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை
குளச்சலில் டாஸ்மாக் மேற்பார்வையாளரை அரிவாளால் வெட்டிய ஆசாமி மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.
நாகர்கோவில்:
குளச்சலில் டாஸ்மாக் மேற்பார்வையாளரை அரிவாளால் வெட்டிய ஆசாமி மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.
டாஸ்மாக் மேற்பார்வையாளர்
குளச்சல் அருகே உள்ள இரும்பிலி பொட்டல்கரையை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 53). இவர் குளச்சல் பயணியர் விடுதி சந்திப்பில் உள்ள டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இரவு இவர் பணி முடிந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரிடம் டாஸ்மாக் கடையில் வசூலான ரூ.6½ லட்சம் இருந்தது. அந்த பணத்தை கொள்ளையடிக்க ஒரு மர்ம ஆசாமி திடீரென பாய்ந்து வந்து அரிவாளால் வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த கோபாலகிருஷ்ணன் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் கொலை வெறி தாக்குதல் நடத்தியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி குமரி மாவட்ட அனைத்து டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு தலைவர் நடேசன் தலைமையில் டாஸ்மாக் பணியாளர்கள் திரளாக வந்து கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-
குண்டர் சட்டம்
டாஸ்மாக் மேற்பார்வையாளர் கோபாலகிருஷ்ணனை ஆசாமி அரிவாளால் வெட்டியதில் அவரது கைவிரல் துண்டிக்கப்பட்டது. தலையிலும் காயம் ஏற்பட்டுள்ளது.
எனவே கோபாலகிருஷ்ணன் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். மேலும் டாஸ்மாக் பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும். தாக்குதலுக்குள்ளான கோபாலகிருஷ்ணன் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் மனு அளிக்க வந்தவர்கள் கோபாலகிருஷ்ணன் உடலில் ஏற்பட்ட வெட்டு காயங்களை புகைப்படம் எடுத்து அதை பேனராக அச்சிட்டு இந்தனர். அந்த பேனரை பிடித்தபடி மனு அளிக்க வந்திருந்தனர்.
பணி பாதுகாப்பு
இதே போல் தமிழ்நாடு மாநில வாணிபக் கழக பணியாளர் முன்னேற்ற சங்க (தொ.மு.ச.) மாவட்ட தலைவர் மரிய செல்வன் மற்றும் நிர்வாகிகள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அளித்த மனுவில், "குளச்சல் மதுக்கடை மேற்பார்வையாளர் கோபாலகிருஷ்ணனை தாக்கிய மர்ம நபர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து உடனடியாக குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். இனிவரும் காலங்களில் டாஸ்மாக் பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும்" என்று கூறப்பட்டு இருந்தது.