மின் ஸ்கூட்டர் தீப்பற்றியதில் ரூ.4 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்
மின் ஸ்கூட்டர் தீப்பற்றியதில் ரூ.4 லட்சம் பொருட்கள் எரிந்து நாசமானது.
மங்களமேடு:
தீப்பற்றி எரிந்தது
பெரம்பலூர் மாவட்டம், மங்களமேட்டை அடுத்துள்ள பொன்னகரம் கிராமத்தை சேர்ந்த துரைசாமியின் மகன் அழகேசன். விவசாயி. இவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு மின்சார ஸ்கூட்டர் வாங்கி, ஓட்டி வந்தார்.
இந்நிலையில் நேற்று மதியம் 2 மணி அளவில் தனது வீட்டின் பின்பக்கத்தில் மின்சார ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு சார்ஜ் போட்டுள்ளார். சிறிது நேரத்தில் திடீரென மின்சார ஸ்கூட்டரில் தீப்பற்றி எரிந்தது. அருகில் இருந்த மோட்டார் சைக்கிள், சைக்கிளிலும், வீட்டிலும் தீ பரவியது.
பொருட்கள் நாசம்
இதைக்கண்ட அழகேசன் மற்றும் குடும்பத்தினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இருப்பினும் அதற்குள் மின்சார ஸ்கூட்டர் முற்றிலும் எரிந்து தீக்கிரையானது. மேலும் சைக்கிள், மோட்டார் சைக்கிள் சேதமடைந்தது.
இந்த தீ விபத்தில் வீட்டு உபயோக பொருட்கள் உள்பட ரூ.4 லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசமானது. மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தீ விபத்து குறித்து மங்களமேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.