ஏழைகளுக்கு ரூ.20 ஆயிரத்தில் பொருட்கள்

குமரி மாவட்டத்தில் ேகாவில்களில் திருமணம் செய்யும் ஏழைகளுக்கு ரூ.20 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் வழங்கப்படுவதாக இணை ஆணையர் தெரிவித்துள்ளார்.

Update: 2022-10-17 21:24 GMT

சுசீந்திரம்:

குமரி மாவட்டத்தில் ேகாவில்களில் திருமணம் செய்யும் ஏழைகளுக்கு ரூ.20 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் வழங்கப்படுவதாக இணை ஆணையர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து குமரி மாவட்ட திருக்கோவிலின் இணை ஆணையர் ஞானசேகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கோவில்களில் திருமணம்

குமரி மாவட்டத்தில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், குமாரகோவில் வேளிமலை முருகன் கோவில், மருங்கூர் சுப்பிரமணியசாமி கோவில், தோவாளை முருகன் கோவில், திற்பரப்பு மகாதேவர் கோவில், வடிவீஸ்வரம் இடர் தீர்த்த பெருமாள் கோவில், வடிவீஸ்வரம் அழகம்மன் கோவில், பறக்கை மதுசூதன பெருமாள் கோவில், நாகர்கோவில் நாகராஜா கோவில், நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் போன்ற கோவில்களில் பக்தர்கள் தங்கள் விருப்பத்தின் பேரில் விண்ணப்பம் செய்து திருமணம் நடத்திக் கொள்ளலாம்.

ஆனால் சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலிலும், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலிலும் பக்தர்கள் திருமணம் செய்ய அனுமதி கிடையாது.

ரூ.20 ஆயிரம் செலவில் திருமணம்

இந்தநிலையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி ஏழை இந்து மக்கள் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்களில் திருமணம் செய்தால் அவர்கள் பயன் பெறும் வகையில் அறநிலையத்துறை சார்பில் ரூ.20 ஆயிரம் செலவில் திருமணம் நடத்தப்படும்.

அதன்படி ரூ.10 ஆயிரம் செலவில் 2 கிராம் தங்கத்தில் தாலி, ஆயிரம் ரூபாய் செலவில் மணமகனுக்கு திருமண உடை, ரூ.2 ஆயிரம் செலவில் மணமகளுக்கு திருமணஉடை, ரூ.2 ஆயிரம் செலவில் திருமணத்திற்கு வருகிற உறவினர்கள் 20 பேருக்கு உணவு, ஆயிரம் ரூபாய் செலவில் மாலை மற்றும் பூ. ரூ.3 ஆயிரம் செலவில் பாத்திரங்கள் மற்றும் ஆயிரம் ரூபாயில் இதரச் செலவுகள் என மொத்தம் ரூ.20 ஆயிரம் செலவில் திருமண பொருட்கள் கொடுத்து திருமணம் செய்து வைக்க அரசு தீர்மானித்துள்ளது.

அறிவிப்பு பலகை

இதனை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகத்திற்கு உட்பட்ட அனைத்து கோவில்களிலும் அறிவிப்பு பலகையும் வைத்துள்ளோம். மேலும் சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவில், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். இதனை ஏழை இந்து மக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு திருக்கோவில் நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்