விடைபெற்றது தென்மேற்கு பருவமழை; 35 மில்லி மீட்டர் மழை குறைவு
தென்மேற்கு பருவமழை விடைபெற்றது. இதில், கடலூர் மாவட்டத்தில் 35 மில்லி மீட்டர் அளவுக்கு மழை குறைவு என்பதாலும், காவிரி நீர் கைவிட்டதாலும் டெல்டா விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை 4 மாதங்கள் பெய்யும். அதன்படி இந்த ஆண்டு ஜூன் மாதம் இடையில், சற்று தாமதமாக தொடங்கியது. இந்த தென்மேற்கு பருவ மழையின் மூலம் தமிழகத்தில் கன்னியாகுமரி, தேனி, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்கள் அதிக மழை பொழிவை பெறும்.
ஏமாற்றம்
இது தவிர மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களிலும் கன மழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் சராசரியான மழையை கொடுக்கும். கோடை காலத்திற்கு பிறகு இந்த மழை பெய்வதால் விவசாயிகளுக்கு அதிக பயன்பெறும் வகையில் அமையும். நீர் நிலைகள் நிரம்பி, விவசாயிகள் பயிரிட ஏதுவாக இந்த மழை இருக்கும்.
குறிப்பாக தென்மேற்கு பருவ மழை பெய்தால் மேட்டூர் அணை நிரம்பி, சம்பா பயிர்களுக்கு மட்டுமின்றி குறுவை பயிர்களுக்கும் தண்ணீர் பாய்ச்சுகிற அளவுக்கு தண்ணீர் கிடைக்கும். ஆனால் இந்த ஆண்டு போதிய மழை இல்லை. இதனால் மேட்டூர் அணை நிரம்பாமல் விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை அளித்தது.
35 மில்லி மீட்டர் மழை குறைவு
இதை நம்பி கடலூர் மாவட்ட டெல்டா பகுதி விவசாயிகள் சாகுபடி செய்தனர். ஆனால் தற்போது தண்ணீர் கிடைக்குமா? என்று ஏக்கத்துடன் காத்திருக்கிறார்கள். காவிரி நீரை தர கர்நாடக அரசும் மறுத்து வரும் நிலையில், விவசாயிகளின் நிலை கேள்விக்குறியாக இருந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் வழக்கமாக தென்மேற்கு பருவ மழை ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை 383.10 மில்லி மீட்டர் மழை பெய்ய வேண்டும். தற்போது தென்மேற்கு பருவ மழை விடைபெற்ற நிலையில், இந்த ஆண்டு ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை 348.02 மில்லி மீட்டர் மழை தான் பெய்துள்ளது. இது 35.08 மில்லி மீட்டர் குறைவாகும். இதனால் விவசாயிகள் நெல் பயிருக்கு தண்ணீர் கிடைக்குமா? என்று ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.