உடுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை தீவிரமடைந்துள்ள நிலையில் தரமான விதைகள் கிடைப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முக்கிய காரணி
உடுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்கு காய்கறிகள் மட்டுமல்லாமல் நெல், கரும்பு, வாழை மற்றும் தானிய வகைகளும் பயிரிடப்படுகிறது. இந்தப் பகுதிகளின் பிரதான சாகுபடிப் பயிராக தென்னை உள்ளது. தற்போது இங்கு நல்ல மழை பெய்து வருவதால் மகிழ்ச்சியடைந்துள்ள விவசாயிகள் சாகுபடிக்குத் தயாராகி வருகிறார்கள். எனவே விதைத் தேவை அதிகரித்துள்ள நிலையில் விவசாயிகளுக்கு தரமான விதைகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:- 'எந்தப் பயிராக இருந்தாலும் விளைச்சலைத் தீர்மானிக்கும் முக்கிய காரணிகளாக மண், நீர், விதை, பராமரிப்பு மற்றும் பருவநிலை உள்ளது. தரமான விதைகள் கிடைக்காவிட்டால் வளமான மண், சீரான பராமரிப்பு, கைகொடுக்கும் பருவநிலை என்று எது கிடைத்தாலும் பயனில்லாமல் போய் விடும். பொதுவாக விவசாயிகள் ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு விதமான பயிர்களை சாகுபடி செய்வார்கள். மேலும் பயிர் சுழற்சி முறையில் வெவ்வேறு பயிர்களை சாகுபடி செய்வது பூச்சி, நோய் தாக்குதலிலிருந்து பயிர்களைப் பாதுகாக்க உதவும்.
விதைத்தரம்
உடுமலை பகுதியில் எல்லா பருவத்திலும் காய்கறிகள் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போதைய நிலையில் மானாவாரியில் அதிக அளவில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்படுகிறது. நெல், உளுந்து உள்ளிட்ட தானிய வகை விதைகள் வேளாண்மைத்துறை மூலம் மானிய விலையில் வழங்கப்படுகிறது. ஆனால் பெரும்பாலான விவசாயிகள் தனியார் நிறுவனங்களின் விதைகளையே விரும்பி வாங்குகின்றனர். மேலும் தோட்டக்கலைத்துறைப் பயிர்களான முருங்கை, சின்ன வெங்காயம், பீட்ரூட் போன்றவற்றின் விதைகள் பெரும்பாலான நேரங்களில் தோட்டக்கலைத்துறையினரால் வழங்கப்படுவதில்லை.
இதனால் பெரும்பாலும் தனியார் நிறுவனங்களையே நம்பியிருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. தனியார் நிறுவனங்களாக இருந்தாலும் விதைத்தரம் பல கட்டங்களில் பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே சான்றளிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.ஆனாலும் சமீப காலங்களாக தரமற்ற விதைகளால் விவசாயிகள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். இதனால் இழப்பைச் சந்திக்கும் விவசாயிகளில் பலருக்கு இழப்பீடு கோருவதற்கான நடைமுறைகள் தெரிவதில்லை. அதுபோன்ற சூழலில் விதை விற்பனையாளர்கள் மற்றும் அதிகாரிகள் பொறுப்பேற்று தனியார் நிறுவனங்களிலிருந்து இழப்பீடு பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிக மகசூல் ஆசை காட்டும் தனியார் விதை நிறுவனங்கள் மகசூல் இழப்பு ஏற்பட்டால் விவசாயிகளையே குற்றம் சாட்டுகின்றனர். இதனால் விவசாயிகள் பாதிப்பதைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'. இவ்வாறு விவசாயிகள் கூறினர்.