தேவாலயங்களில் புனித வெள்ளி சிறப்பு வழிபாடு

தேவாலயங்களில் புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடந்தது.

Update: 2023-04-07 20:48 GMT

இயேசு கிறிஸ்து கல்வாரி மலையில் சிலுவையில் அறையப்பட்டதை நினைவுகூருவதாக புனித வெள்ளி அனுசரிக்கப்படுகிறது. பாவிகளுக்காக தன்னை சிலுவை மரணத்துக்கு ஒப்பு கொடுத்த இயேசு கிறிஸ்துவின் பாடுகளை உலகம் முழுவதும் கிறிஸ்தவ மக்கள் நோன்பு தினமாக கடைபிடித்து வருகிறார்கள். புனித வெள்ளியையொட்டி கிறிஸ்தவ தேவாலயங்களில் நேற்று நீண்டநேரம் திருப்பலி, ஆராதனைகள் நடைபெற்றன. இந்தநாளில் நோன்பிருந்து வெள்ளாடை அணிந்து சிலுவைப்பாதையில் பங்கெடுப்பது வழக்கமாகும்.

இதன்படி திருச்சி பாலக்கரை எடத்தெரு பகுதியில் உள்ள உலகமீட்பர் பசிலிக்காவில் நற்கருணை வழிபாடு மற்றும் சிலுவைப்பாதை நடந்தது. பிறகு சிலுவையில் அறையப்பட்ட இயேசு சொரூபத்தை ஊர்வலமாக எடுத்து வந்து தூம்பா பவனி என்னும் இயேசுவின் இறுதி ஊர்வலம் நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். இதேபோல் புத்தூர் பாத்திமா ஆலயம், மேலப்புதூர் மரியன்னை ஆலயம், லூர்துஅன்னை தேவாலயம், செயின்ட் ஜான் தேவாலயம் உள்பட பல்வேறு ஆலயங்களில் புனிதவெள்ளியையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டனர். நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஈஸ்டர் பண்டிகையையொட்டி தேவாலயங்களில் இன்று நள்ளிரவு இயேசு உயிர்தெழும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்