தஞ்சை கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

புனித வெள்ளியையொட்டி தஞ்சை கிறிஸ்தவ தேவாலயங்களில் நேற்று சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2023-04-07 21:11 GMT

தஞ்சாவூர், ஏப்.8-

புனித வெள்ளியையொட்டி தஞ்சை கிறிஸ்தவ தேவாலயங்களில் நேற்று சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

ஈஸ்டர் பண்டிகை

கிறிஸ்தவ மக்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஈஸ்டர் பண்டிகை ஒன்றாகும். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு 3-ம் நாள் உயிர்த்தெழுவதை கொண்டாடும் வகையில் உயிர்ப்பு பெருவிழாவாக இந்த பண்டிகை நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது.ஈஸ்டர் பண்டிகை கடந்த பிப்ரவரி மாதம் 22-ந் தேதி சாம்பல் புதனுடன் தொடங்கியது. இயேசுவின் பாடுகளை நினைவு கூறும் வகையில் தவக்காலத்தின் 40 நாட்களில் கிறிஸ்தவர்கள் கடும் விரதமிருந்து ஆலயங்களுக்கு சென்று வழிபாடு நடத்தி வருகின்றனர்.

புனிதவெள்ளி

இந்த தவக்காலத்தின் கடைசிவாரமான புனித வாரத்தின் தொடக்க ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை ஞாயிறாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில், கிறிஸ்தவ மக்கள் குருத்தோலைகளை கையில் ஏந்தி பவனியாக சென்று தேவாலயங்களில் வழிபடுவது வழக்கம். இதன்படி கடந்த 2-ந் தேதி குருத்தோலை ஞாயிறு கடைபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இயேசு சிலுவையில் உயிர் விட்ட நாளை புனித வெள்ளியாக நேற்று அனுசரிக்கப்பட்டது.சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இயேசு சிலுவையில் அறையப்பட்டு, மரித்தநாளை புனித வெள்ளியாக உலகில் உள்ள கிறிஸ்தவர்கள் அனைவரும் துக்க நாளாக அனுசரித்து வருகின்றனர். அன்றைய தினம் அனைவரும் விரதம் இருந்து தேவாலயங்களுக்கு சென்று சிலுவைப்பாதை வழிபாடு, திருச்சிலுவை முத்தி செய்தல் போன்ற வழிபாடுகளில் பங்கேற்பார்கள். கிறிஸ்தவர்களுக்கு இது முக்கியமான கடன் திருநாளாகும்.

துக்கநாளாக அனுசரிப்பு

தவக்காலத்தின் கடைசி வெள்ளியாகவும், ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய வெள்ளியாகவும் இடம் பெறும் இந்த வெள்ளியானது உலகில் உள்ள கிறிஸ்தவர்களால் ஒரே நாளில் துக்கநாளாக அனுசரிக்கப்படுகிறது. அதன்படி தஞ்சை மேரீஸ்கார்னர் அருகே உள்ள மறைமாவட்டத்தின் தலைமை பேராலயமாக விளங்கும் திரு இருதய பேராலயத்தில் புனித வெள்ளி சிறப்பு வழிபாடு முன்னாள் ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் நேற்றுமாலை நடந்தது.முன்னதாக பேராலய வளாகத்தில் சிறப்பு நற்செய்தி வாசகம், மறையுரை, சிறப்பு மன்றாட்டுக்கள், திருச்சிலுவை ஆராதனை செய்யும் சடங்கு நடைபெற்றது. பின்னர் இறைமக்கள் பாடுபட்ட இயேசுவின் சிலுவையை முத்தி செய்யும் சடங்கு நடைபெற்றது. தொடர்ந்து முக்கிய நிகழ்வான சிலுவைப்பாதை வழிபாடு நடைபெற்றது. முடிவில் இயேசுவின் பாடுபட்ட சொரூபம் சிலுவையில் இருந்து இறக்கப்பட்டு பவனியாக புனித வியாகுல அன்னை ஆலயத்திற்கு எடுத்து செல்லும் நிகழ்வு நடந்தது.இதில் இறைமக்கள் ஏராளமானோர் எரியும் மெழுகுவர்த்தியை கையில் ஏந்தியபடி ஜெபித்து கொண்டு சென்றனர். மரித்த ஆண்டவர் சொரூபம் இறைமக்கள் வழிபாட்டிற்காக புனித வியாகுல அன்னை ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த வழிபாட்டு நிகழ்ச்சியில் பரிபாலகர் சகாயராஜ், பேராலய பங்குத்தந்தை பிரபாகர், உதவி பங்குத்தந்தை பிரவீன், ஆயரின் செயலாளர் ஆன்ட்ரூ செல்வகுமார் மற்றும் குருக்கள் பலர் கலந்து கொண்டனர்.

சி.எஸ்.ஐ. கிறிஸ்துநாதர் ஆலயம்

தஞ்சை சிவகங்கை பூங்கா அருகே உள்ள கோட்டை சி.எஸ்.ஐ. கிறிஸ்துநாதர் ஆலயத்திலும் நேற்று மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை புனித வெள்ளி மும்மணி தியான ஆராதனை நடைபெற்றது. இயேசு சிலுவையில் திருவாய் மலர்ந்த 7 வார்த்தைகளை பற்றி சபையுடன் உறுப்பினர்கள் பிரசங்கித்தனர். முகவுரை தியானத்தை சபை ஆயர் பிரைட் பிராங்க்ளின் செய்து முடிக்க, ஒவ்வொரு பாடலோடு ஒவ்வொரு வார்த்தையாக தியானிக்கப்பட்டது.இதில் கிறிஸ்தவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு தியானம் செய்தனர். முடிவில் சபை ஆயர் ஆசி கூற ஆராதனை நிறைவடைந்தது. பின்னர் அனைவருக்கும் சிலுவை அடையாளம் போட்ட ரொட்டி (பன்) வழங்கப்பட்டது. இன்று (சனிக்கிழமை) மாலை 6.30 மணிக்கு கல்வாரி கானங்கள் என்ற கலைநிகழ்ச்சி நடக்கிறது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4.30 மணிக்கு உயிர்த்தெழுந்த திருநாள் ஆராதனை நடக்கிறது.

சிறப்பு பிரார்த்தனை

இதேபோல் தஞ்சை மானம்புச்சாவடியில் உள்ள சி.எஸ்.ஐ. தூய பேதுரு ஆலயம், புதுக்கோட்டை சாலையில் உள்ள புனித அடைக்கல அன்னை ஆலயம், குழந்தை ஏசு ஆலயம், மங்களபுரத்தில் உள்ள புனித லூர்து அன்னை ஆலயம், வடக்குவாசல் அருளானந்தர் ஆலயம், மானம்புச்சாவடி சூசையப்பர் ஆலயம், அண்ணாநகர் செபஸ்தியார் ஆலயம், மாதாக்கோட்டை லூர்துமாதா ஆலயம் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்